ஆர்டிஎஸ் ரயில் பணிகள் 90 விழுக்காடு நிறைவு

ஆர்டிஎஸ் ரயில் பணிகள் 90 விழுக்காடு நிறைவு

2 mins read
1edb6205-2444-4595-84ca-b6d6b0664210
ஆர்டிஎஸ் விரைவு ரயில் சேவை சிங்கப்பூருக்கும் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திற்கும் இடையேயான பயண நேரத்தை ஆறு நிமிடங்களாகக் குறைக்கும். - படம்: சாவ் பாவ்

https://www.thestar.com.my/news/nation/2026/05/09/only-six-minutes-from-johor-to-singapore-with-rts

ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான விரைவு ரயில் சேவைத் (ஆர்டிஎஸ்) திட்டத்தின் பணிகள், ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி 90 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது சிங்கப்பூருக்கும் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திற்கும் இடையேயான பயண நேரத்தை ஆறு நிமிடங்களாகக் குறைக்கும்.

புக்கிட் சாகர் பகுதியில் திட்டப்பணிகளை வெள்ளிக்கிழமை (மே 8) பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த 4 கிலோமீட்டர் நீள ரயில் பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 10,000 பயணிகள் இரு திசைகளிலும் பயணிக்க முடியும்,” என்றார்.

இத்திட்டத்தின் தொடக்க விழாவிற்கான பாதுகாப்பு, தொழில்நுட்பம், மனிதவளப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக மொத்தம் 794 பேர் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இதில் எல்லைக் கட்டுப்பாட்டு முகமை, சுங்கத்துறை, காவல்துறை அதிகாரிகள் எனப் பல பணிகள் அடங்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 478 புதிய அதிகாரிகள் ஜூன் 22 முதல் செப்டம்பர் 27 வரை செகாமட் காவல்துறை பயிற்சி மையத்தில் சிறப்புப் பயிற்சி பெற உள்ளனர். இவர்கள் அக்டோபர் 1 முதல் புக்கிட் சாகர் சுங்க குடிநுழைவு வளாகத்தில் பணி அமர்த்தப்படுவார்கள்.

சோதனைகளை விரைவுபடுத்த பொருள்களைச் சோதிக்கும் 18 இயந்திரங்கள், 22 உடல் சோதனை இயந்திரங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் ஒரே இடத்தில் குடிநுழைவுச் சோதனைகளை மேற்கொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.

பழைய குடிவரவு முறைகளுக்குப் பதிலாக தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு அமைப்பான MyNIISe என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இது பயணிகளுக்குத் தடையற்ற, விரைவான பயண அனுபவத்தை வழங்கும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, இரு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்