கியூபா மிரட்டலாய் விளங்குவதாகக் கூறுகிறது அமெரிக்கா

கியூபா மிரட்டலாய் விளங்குவதாகக் கூறுகிறது அமெரிக்கா

1 mins read
827a77aa-0d93-448d-a7b3-b771584acbd6
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, கியூபாவுடன் அமைதி உடன்பாடு எட்டப்படும் சாத்தியம் அதிகமில்லை என்று கூறியுள்ளார். - ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்குக் கியூபா தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலாய் விளங்குவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்திருக்கிறார். அந்நாட்டுடன் அமைதி உடன்பாடு எட்டப்படும் சாத்தியம் அதிகமில்லை என்றார் அவர்.

1996ஆம் ஆண்டு இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் தொடர்பில், கியூபாவின் முன்னாள் அதிபர் ராவுல் காஸ்ட்ரோமீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மறுநாள், திரு ரூபியோவின் கருத்துகள் வந்துள்ளன. அந்த சம்பவத்தில் அமெரிக்கர்கள் மூவர் மாண்டனர்.

அரசதந்திரத் தீர்வையே வா‌ஷிங்டன் விரும்புவதாகத் திரு ரூபியோ சொன்னார். இருப்பினும் எந்தவொரு மிரட்டலுக்கும் எதிராக நாட்டைக் காக்கும் கடமையும் உரிமையும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

திரு ரூபியோ பொய் சொல்வதாகக் கியூபாவின் வெளியுறவு அமைச்சர் புரூணோ ரோட்ரிகஸ் கூறினார். தமது நாடு ஒருபோதும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாய் இருந்ததில்லை என்றார் அவர்.

ஒட்டுமொத்த வட்டாரத்திலும் பயங்கரவாதச் செயல்களுக்குக் கியூபா ஆதரவுக்கரம் நீட்டுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சாட்டினார். ஆனால் ‘எக்ஸ்’ தளத்தில் அதனைத் திரு ரோட்ரிகஸ் தீவிரமாக மறுத்தார்.

திரு ரூபியோ, ராணுவத் தாக்குதலைத் தூண்ட முயல்வதாக அவர் குறைகூறினார். தமது நாட்டின்மீது அமெரிக்கா இரக்கமின்றி, திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவதாகத் திரு ரோட்ரிகஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்