ஜகார்த்தா: இந்தோனீசியப் பங்குச் சந்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க டாலருக்கும் சிங்கப்பூர் வெள்ளிக்கும் நிகரான அந்நாட்டின் நாணயமான ரூப்பியாவின் மதிப்பு இதுவரை இல்லாத சரிவை எட்டியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, நாட்டின் நிதிநிலையைக் கடுமையாகப் பாதிக்கும் என்ற முதலீட்டாளர்களின் கவலையையே இந்த வீழ்ச்சி காட்டுவதாகப் பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தோனீசியப் பங்குச் சந்தையின் முதன்மைக் குறியீடான ‘ஜகார்த்தா கம்போசிட் இண்டெக்ஸ்’, புதன்கிழமை (ஜூன் 3) 5.2 விழுக்காடு வரை சரிந்தது. இது, 2021 மே மாதத்திற்குப் பிறகு ஆகக் குறைவான நிலையாகும். 2026ல் மட்டும் அக்குறியீடு ஏறக்குறைய 32 விழுக்காடு சரிந்துள்ளது.
புளூம்பெர்க் கண்காணிக்கும் உலகின் 90க்கும் மேற்பட்ட உலகளாவிய பங்குச் சந்தைக் குறியீடுகளில், 2026ல் ஆக மோசமாகச் செயல்படும் சந்தையாக இந்தோனீசியப் பங்குச் சந்தை விளங்குகிறது.
இதற்கிடையே, அமெரிக்க டாலருக்கும் சிங்கப்பூர் வெள்ளிக்கும் நிகரான ரூப்பியாவின் மதிப்பு 0.5 விழுக்காடு குறைந்தது. புதன்கிழமை பிற்பகல் 1.45 மணி நிலவரப்படி, முந்தைய நாள் வர்த்தக முடிவைக் காட்டிலும் ரூப்பியாவின் மதிப்பு 0.47 விழுக்காடு சரிந்தது. இதுவரை இல்லாத அளவாக ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரூப்பியாவின் மதிப்பு 14,008 என்ற அளவை எட்டியது.
இறக்குமதி செய்யப்படும் எண்ணெய், விண்ணைமுட்டும் எரிவாயு விலை உயர்வு, நாட்டின் ஏற்றுமதி வருவாயைவிட அதிகமாக இருந்ததால், இந்தோனீசியாவின் வர்த்தக உபரி கடந்த ஏப்ரலில் கிட்டத்தட்ட இல்லாமல் போனதாக செவ்வாய்க்கிழமை வெளியான புள்ளிவிவரங்கள் காட்டின. அதைத் தொடர்ந்து. இந்தோனீசியப் பங்குச் சந்தையும் நாணய மதிப்பும் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன.
2026ல் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூப்பியாவின் மதிப்பு ஏறத்தாழ 7 விழுக்காடு வரை சரிவடைந்துள்ளது.

