அமெரிக்க-உக்ரேனியப் பேச்சுக்கு முன்னர் கியவ்வைத் தாக்கிய ர‌‌ஷ்யா

அமெரிக்க-உக்ரேனியப் பேச்சுக்கு முன்னர் கியவ்வைத் தாக்கிய ர‌‌ஷ்யா

2 mins read
18272220-b5a7-44bf-b77d-67627132b544
உக்ரேனின் ஸப்போரிஸியா நகரில் ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு ர‌‌ஷ்யா நடத்திய தாக்குதலின்போது பற்றியெரியும் குடியிருப்புக் கட்டடம். - ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஜெனீவா: ர‌‌ஷ்யா உக்ரேன்மீது தொடுத்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் வா‌ஷிங்டனும் கியவ்வும் ஜெனீவாவில் புதிய சுற்றுப் பேச்சில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) சந்திக்கின்றன.

அதில் உக்ரேனின் தலைமை சமரசப் பேச்சாளர் ரஸ்டம் உமெரோவும் அமெரிக்காவின் சிறப்புத் தூதர்கள் ஸ்டீவ் விட்கோஃபும் ஜாரட் கு‌‌ஷ்னரும் பங்கேற்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இரு தரப்பும் ர‌‌ஷ்யாவுடன் அடுத்த மாதத் (2026 மார்ச்) தொடக்கத்தில் முத்தரப்புப் பேச்சில் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னெடுக்கும் புதிய முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்தப் பேச்சுகள் அமைகின்றன. ர‌‌ஷ்ய-உக்ரேனியப் போரை முடிவுக்குக் கொண்டுவர வா‌ஷிங்டன் முனைகிறது.

கிரெம்ளினின் பொருளியல் விவகாரங்களுக்கான தூதர் கிரில் டிமிட்ரியேவ் ஜெனீவாவில் நடைபெறும் பேச்சில் கலந்துகொள்வார் என்று ர‌‌ஷ்ய அரசாங்கத்தின் ஊடகமான டாஸ் தெரிவித்தது.

இந்நிலையில், உக்ரேன்மீது புதன்கிழமை இரவு ர‌‌ஷ்யா நடத்திய தாக்குதலில் ஏறக்குறைய 20 பேர் காயமுற்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.

உக்ரேனியத் தலைநகர் கீவையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் நாட்டின் கிழக்கே உள்ள கார்கிவ் நகரையும் நோக்கி புவியீர்ப்பு ஏவுகணைகளும் தாழப் பறக்கும் ஏவுகணைகளும் பாய்ச்சப்பட்டன. தெற்கே உள்ள ஸப்போரிஸியா நகரை ஆளில்லா வானூர்திகள் தாக்கின.

கார்கிவ் வட்டாரத்தில் ஏழு வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.

ஸப்போரிஸியா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் காயமுற்றதாக நகர ஆளுநர் இவான் ஃபெடோரோவ் கூறினார். 19 அடுக்குமாடி வீடுகள் சேதமடைந்தன. மேலும் 500 வீடுகளில் வெப்பமூட்டும் கருவிகள் பாதிக்கப்பட்டன.

தலைநகர் கியவ்வில் சில கட்டடங்கள் சேதமுற்றன.

இவ்வேளையில், உக்ரேன் மீதான அண்மைத் தாக்குதலில் ர‌‌ஷ்யா தாழப் பறக்கும் ஏவுகணையைப் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தாக்குதலின்போது எடுக்கப்பட்ட படங்களில் காணப்படும் இடிபாடுகளிலிருந்து அது தெரியவருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். ர‌‌ஷ்யத் தற்காப்பு அமைச்சு அதுகுறித்துக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்
ர‌ஷ்யாஉக்ரேன்அமெரிக்காஆளில்லா வானூர்திஏவுகணை