கியவ்: உக்ரேன் தலைநகர் கியவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் இரவோடு இரவாக நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் குடியிருப்புக் கட்டடங்கள், கிடங்குகள் மற்றும் தொழிற்பேட்டைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக உக்ரேனிய அவசரகாலச் சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் குறித்து தெரிவித்துள்ள கியவ் மேயர் விடாலி கிளிட்ச்கோ, சோலொமியான்ஸ்கி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்று சேதமடைந்ததாகவும் அதன் சன்னல்கள் நொறுங்கி அருகில் இருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கியவ்வின் தென்மேற்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டை மையத்தின் மீதும் ஏவுகணைகள் பாய்ந்துள்ளன.
புரோவரி மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார் என ஆளுநர் திமுர் தக்காசென்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.
வான்வழித் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்பதால் பொதுமக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஏவுகணைத் தாக்குதல்களால் மின்சார விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. மின்கட்டமைப்பைச் சீரமைக்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே கியவ் நகர் நாள்தோறும் இரவில் இத்தகைய தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ரஷ்யாவுக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது. ரஷ்ய எல்லையோரப் பகுதிகளில் உக்ரேன் நடத்திய தாக்குதல்களில் இந்த வாரத்தில் மட்டும் ஒரு சிறுவன் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.


