தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பின் மீது ர‌ஷ்யா தாக்குதல்

2 mins read
0fa3c1ab-5d62-4b78-b76a-5a6c859285d3
கியவ்வில் ர‌ஷ்யத் தாக்குதலால் ஏற்பட்ட மின்தடை. - படம்: இபிஏ

கியவ்: ர‌ஷ்யா, இரண்டாவது முறையாக உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பின் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது.

வியாழக்கிழமையன்று (நவம்பர் 28) நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல்களால் உக்ரேன் முழுவதும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ர‌ஷ்யா மீது உக்ரேன், அமெரிக்கா வழங்கிய ‘ஏடிஏசிஎம்எஸ்’ (ATACMS) ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியதற்கு இது பதிலடி என்றார் ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின்.

கியவ்வில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் நிலையங்கள் மீதும் ர‌ஷ்யா இனி தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும் திரு புட்டின் எச்சரிக்கை விடுத்தார்.

ர‌ஷ்யா, அருவருக்கத்தக்க முறையில் போரை விரிவுபடுத்தி வருவதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார். சிறிய ஆயுதங்களைப் பாய்ச்சக்கூடிய ‘குரூஸ் மிசைல்ஸ்’ (Cruise Missiles) ஏவுகணைகளை ர‌ஷ்யா பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

அந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு உக்ரேனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மின்தடையால் பாதிக்கப்பட்டனர். ஏற்கெனவே திட்டமிட்டபடி அவ்வப்போது மின்தடையை எதிர்நோக்கி வந்தோர் எப்பொழுதையும்விட அதிக நேரம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ர‌ஷ்யாவின் தாக்குதல்கள் அதிர்ச்சி தரும் வண்ணம் இருந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றில் எடுத்துரைத்தார். உக்ரேனிய மக்களுக்கு ஆதரவு அளிப்பதன் முக்கியத்துவத்தைத் தாக்குதல் நினைவூட்டுவதாக அவர் சுட்டினார்.

இதற்கிடையே, வியாழக்கிழமையன்று ர‌ஷ்யா பாய்ச்சிய வானூர்திகளின் சிதைவுகள் உக்ரேனியத் தலைநகர் கியவ்வில் உள்ள இரு கட்டடங்கள் மீது விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் ஒருவர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கியவ்வின் oனிப்ரோ வட்டாரத்தில் உள்ள குழந்தைகளுக்கான மருந்தகத்தினுள்ளும் வெளியிலும் சிதைவுகள் கிடந்தது, அவசரச் சேவைகள் டெலிகிராம் செயலியில் வெளியிட்ட பதிவில் காணப்பட்டது.

அந்த மருந்தகத்தில் வேலை செய்த பாதுகாவலர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருந்தகத்துக்கு அருகே இருந்த சில கட்டடங்களிலும் சேதம் ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்