மாஸ்கோ: ரஷ்யாவின் செஞ் சதுக்கத்தில் அணிவகுப்புடன் கூடிய வெற்றி நாள் கொண்டாட்டங்களை அதிபர் விளாடிமிர் புட்டின் வலுவான பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை (மே 9) வழிநடத்துகிறார்.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவைக் குறிவைத்து உக்ரேன் சில நாள்களுக்குமுன் நடத்திய தாக்குதல்களை அடுத்து அங்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.
நாசி ஜெர்மனிமீது சோவியத் யூனியன் வெற்றிபெற்றதை அனுசரிப்பதை முன்னிட்டு மாஸ்கோவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ரஷ்ய ராணுவம், முன்னோடிகள், சீன அதிபர் ஸி ஜின்பிங் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அனைத்துலகத் தலைவர்கள் முன்னிலையில் திரு புட்டின் உரையாற்றினார்.
இரண்டாம் உலகப் போர் கற்பித்த பாடங்களை நினைவுகூர்வதாகச் சொன்ன அவர், “உண்மையும் நீதியும் எங்கள் பக்கம்,” என்றார்.
உக்ரேனில் தொடங்கிய போருக்கு ஒட்டுமொத்த ரஷ்யாவும் பக்கபலமாக இருந்தது என்ற திரு புட்டின், நான்காவது ஆண்டாகத் தொடரும் போரை ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்று வர்ணித்தார்.
திரு புட்டினின் உரைக்கு முன் ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது.
விமரிசையாக நடைபெற்ற 80ஆம் ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஷ்யா மூன்று நாள் சண்டைநிறுத்தத்தை அறிவித்திருந்தது. அதை உக்ரேன் ஒரு நாடகம் என்று சாடியது.
தொடர்புடைய செய்திகள்
மே 8ஆம் தேதி சண்டைநிறுத்தம் நடப்புக்கு வந்ததிலிருந்து ஆயிரக்கணக்கான முறை தாக்கப்பட்டதாக உக்ரேனிய ராணுவம் சொன்னது.
ஆனால் சண்டைநிறுத்தம் தொடர்கிறது என்று வலியுறுத்திய ரஷ்யா, உக்ரேன் நூற்றுக்கணக்கான முறை விதிகளை மீறியதாகச் சொன்னது.
பரிந்துரைக்கப்பட்ட சண்டைநிறுத்தத்துக்கு சில நாள்களுக்கு முன் ரஷ்யாவும் உக்ரேனும் ஒன்று மற்றதன்மீது தாக்குதல் நடத்தின.
உக்ரேனின் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களால் ரஷ்யாவில் உள்ள விமானச் சேவைகள் ரத்தாகின. அதனால் கிட்டத்தட்ட 60,000 பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.