மாஸ்கோ: கிரைமியா பகுதியை நோக்கிச் செல்லும் முக்கியப் பாலத்தில் ரஷ்யா சாலை, ரயில் போக்குவரத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
அங்கு நேர்ந்த வெடிப்புச் சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திங்கட்கிழமை அதிகாலையில், உள்ளூர் குடியிருப்பாளர்கள் இருமுறை வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாகக் கூறப்பட்டது.
அந்த வெடிப்புகளால் கிரைமியா பகுதியையும் ரஷ்யாவையும் இணைக்கும் கெர்ச் நீரிணைக்கு எதிர்ப்புறத்தில் உள்ள பெரிய பாலத்தில், சாலையின் ஒரு பகுதி சேதமடைந்தது.
உக்ரேன் அந்தத் தாக்குதலை நடத்தியதாக கிரைமியா நாடாளுமன்றத் தலைவர் விளாடிமிர் கான்ஸ்டண்டினோவ் கூறியதாக ரஷ்ய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது.
உக்ரேனிலிருந்து கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதற்கான நேரம் முடிவடையவிருக்கும் வேளையில் வெடிப்புகள் நேர்ந்தன.
ஐக்கிய நாட்டு நிறுவனமும் துருக்கியும் ஏற்பாடு செய்த அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகப்போவதாக ரஷ்யா கடந்த வாரம் கோடிகாட்டியது.
அண்மைய வெடிப்புகளில் பதின்ம வயதுப் பெண் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்ய அதிகாரிகள் சம்பவம் குறித்து கூடுதல் தகவல்களை வெளியிடாதபோதும், கிரைமியாவில் ஏழு ஆளில்லா விமானங்களும் இரண்டு கடலடி வாகனங்களும் அழிந்துபோனதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது. உக்ரேன் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியிருப்பதாக அது பழிசுமத்தியுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, தெற்கு உக்ரேனில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

