தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கியவ் மீது ஆளில்லா வானூர்தித் தாக்குதலைத் தொடரும் ரஷ்யா

1 mins read
0e5e1ff4-4ba5-43fc-b721-1aba27d53d10
கியவ்வில் ரஷ்யா ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்திய வேளையில் அக்டோபர் 20ஆம் தேதி இரவு அத்தகைய வானூர்திகளைச் சுழலும் ஒளிக்கற்றையைப் பயன்படுத்தி உக்ரேனிய அதிகாரிகள் தேடினர். - படம்: ராய்ட்டர்ஸ்

கியவ்: ரஷ்யா அக்டோபர் 20ஆம் தேதி இரவுநேரத்தில் பல ஆளில்லா வானூர்திகளை ஏவித் தாக்குதலைத் தொடர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்யா உக்ரேனில் இத்தகைய இரவுநேரத் தாக்குதலை மேற்கொண்டது.

இதில் குடியிருப்புக் கட்டடங்களும் சேதமடைந்தன. பொதுமக்களில் ஒருவர் காயமடைந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரேன் மீதான தாக்குதலின் தீவிரத்தைப் பகைவர்கள் குறைக்கவில்லை என்று கியவ்வின் ராணுவ நிர்வாகத் தலைவர் செர்ஹி பாப்கோ டெலிகிராம் செயலி மூலம் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு திசைகளிலிருந்து கியவ் மீது ஏவப்பட்ட ஏறக்குறைய 10 ஆளில்லா வானூர்திகள் அழிக்கப்பட்டதாக அவர் கூறினார். அவை இலக்குகளை எட்டாவிட்டாலும் தகர்க்கப்பட்ட ஆளில்லா வானூர்திகளின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் காயமடைந்ததாக அவர் சொன்னார்.

கட்டடக் கூரைகள், குடியிருப்புக் கட்டடங்கள், மின்கம்பிகள் போன்றவற்றில் இத்தகைய ஆளில்லா வானூர்தி பாகங்கள் விழுந்ததில் சேதம் ஏற்பட்டதாக கியவ் நகர மேயர் கூறினார்.

கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கு கியவ் மீதான ஆகாயத் தாக்குதல் குறித்த எச்சரிக்கை நீடித்தது. முன்னதாக, அக்டோபர் 19ஆம் தேதி இரவு ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்