கியவ்: உக்ரேன் தலைநகர் கியவ்மீது ரஷ்யா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) மிகக் கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது என்று உக்ரேனிய அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அத்தாக்குதலில் நால்வர் பலியானதோடு பலர் காயமுற்றுள்ளதாக உக்ரேனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கியவ்வில் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பெருஞ்சேதத்தால், அங்கு அவசரகால மின்சாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உக்ரேனின் மின்உற்பத்தி நிறுவனம் ‘உக்ரெனர்கோ’ உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரேனியத் தலைநகரை ரஷ்யா குறுகிய காலத்தில் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளதாக கியவ்வின் ராணுவ நிர்வாக அதிகாரி டைமுர் காசென்கோ கூறினார்.
ரஷ்யா உக்ரேனில் நடத்தியுள்ள தாக்குதலில் அதன் அனல் மின்நிலையங்கள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளதாக உக்ரேனிய தனியார் மின்நிறுவனம் ‘டிடெக்’ குறிப்பிட்டுள்ளது.
இரவு வேளையில், ஒருமணி நேரத்துக்குள் ஏறத்தாழ 20 ஏவுகணைகள் உக்ரேன்மீது பாய்ச்சப்பட்டதாக உக்ரேனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் இதுவே மிகவும் கடுமையானது எனவும் அவை கணித்துள்ளன.
உக்ரேனிய ராணுவம் தாக்குதலின் தன்மையை உடனடியாக விளக்கவில்லை.
ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதல் குறித்து மாஸ்கோ எவ்வித விவரங்களையும் வெளியிடவில்லை. கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் உக்ரேனில் போர் நடத்திவரும் ரஷ்யா, உக்ரேனின் மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்து ஆளில்லா வானூர்திகளையும் (ட்ரோன்) ஏவுகணைகளையும் அடிக்கடி ஏவியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய தாக்குதலைச் சமாளிக்க உக்ரேனிய வான்தற்காப்பு அமைப்புகள் போராடி வருகின்றன.
ரஷ்ய எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உக்ரேனிய நகரான கார்கிவ் வட்டார ஆளுநர் ஒலே சிநியேபொவ், அப்பகுதியில் நால்வர் தாக்குதலில் மரணமடைந்துள்ளதோடு அறுவர் காயமுற்றதாகக் கூறியுள்ளார்.
உக்ரேனின் அவசர சேவை அமைப்பு, கார்கிவ் பகுதியில் அஞ்சல் நிலையம் உள்பட பல கட்டடங்கள் தீயில் அழிக்கப்பட்டன எனவும் 30 நபர்கள் இடிபாடுகளில் இருந்து உயிருடன் காப்பாற்றப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.
தென்பகுதியில் உள்ள ஒடெசா, தொழில்துறைகள் அமைந்துள்ள மத்தியப் பகுதியான கிரைவி ரிஹ் போன்ற இடங்களில் உள்கட்டமைப்புகள், வீடுகள், எரிவாயுக் குழாய்கள் பெருஞ்சேதமைடைந்துள்ளன என்று ஆளுநர் ஒலே மேலும் விவரித்தார்.

