தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைதிப் பேச்சு தோல்வி: உக்ரேன் மீது ரஷ்யா ஆகப்பெரிய வானூர்தித் தாக்குதல்

2 mins read
c0a78298-2423-475e-8406-a95a46302b6c
சரமாரியாக நடத்தப்பட்ட வானூர்தித் தாக்குதலில் உருக்குலைந்த கட்டடங்களில் ஒன்று. - படம்: ராய்ட்டர்ஸ்

கியவ்: உக்ரேன் மீது ரஷ்யப் படையினர் சரமாரியாக வானூர்தித் தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய ஆகாயப் படை அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரேன் மீது ரஷ்யா முழுமையாகப் படை எடுத்த பின்னர் நடத்தப்பட்டு இருக்கும் இரண்டாவது ஆகப்பெரிய வானூர்தித் தாக்குதல் அது என்று உக்ரேன் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (மே 18) காலை 8 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் பிற்பகல் 1 மணி) உக்ரேன் மீது ரஷ்யா 273 வானூர்திகளை ஏவியதாகக் குறிப்பிட்ட அதிகாரிகள் மத்திய கியவ் வட்டாரத்தை முக்கியமாகக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினர்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய வட்டாரங்களிலும் வானூர்தித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்தடுத்து ஏவப்பட்ட வானூர்திகள் தாக்கியதில் 28 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்தார். நான்கு வயதுக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர்.

வானூர்தித் தாக்குதலை முறியடிக்க ஆகாயத் தற்காப்புப் படையினர் தீவிரமாக முயன்றதாக உக்ரேனிய ராணுவம் டெலிகிராம் தளத்தில் தெரிவித்தது.

உக்ரேன்-ரஷ்யப் போரில் இதுவரை இடம்பெற்ற வானூர்தித் தாக்குதல்களில் இதுவே ஆகப்பெரியது என உக்ரேனிய ஆகாயப் படை குறிப்பிட்டு உள்ளது.

இரவு முழுவதும் 88 வானூர்திகளை ஆகாயத் தற்காப்புப் படை முறியடித்துவிட்டதாகவும் இதர 128 வானூர்திகள் பாவனையாக இடம்பெற்று தாக்கும் முன்னரே செயலிழந்து விட்டதாகவும் டெலிகிராமில் வெளியிடப்பட்ட உக்ரேனிய ஆகாயப் படையின் அறிக்கை குறிப்பிட்டது.

2022 பிப்ரவரி 23ஆம் தேதி போர் தொடங்கியபோது ரஷ்யா 267 வானூர்திகளை அனுப்பி பெருந்தாக்குதலை உக்ரேன் மீது நடத்தியது.

போரை நிறுத்த இம்மாதம் 16ஆம் தேதி இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ஏறத்தாழ 100 நிமிடங்கள் நீடித்த அந்தப் பேச்சுவார்த்தையின் பலனாக இருதரப்பிலும் 1,000 போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பான ஓர் உடன்பாடு மட்டுமே எட்டப்பட்டது. போரை நிறுத்துவது குறித்து இருதரப்பிலும் முடிவு எடுக்கவில்லை.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடனும் திங்கட்கிழமை (மே 19) பேச்சு நடத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்