சென்னை-விளாடிவோஸ்டோக் கடல்வழிப் பாதை இணைப்பை வலுப்படுத்த ரஷ்யா திட்டம்

சென்னை-விளாடிவோஸ்டோக் கடல்வழிப் பாதை இணைப்பை வலுப்படுத்த ரஷ்யா திட்டம்

2 mins read
e04ee983-3fe8-4afb-987b-d604a0ee0920
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததிலிருந்து மேற்கத்திய நாடுகள் அதன் மீது பல தடைகளை விதித்துள்ளன. எனவே, வர்த்தகத்துக்கு ஆசியாவின் திசை நோக்கி ரஷ்யாவின் கவனம் திரும்பியுள்ளது. விளாடிவோஸ்டோக் துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படும் எரிபொருள், நிலக்கரி ஆகியவை பேரளவில் அதிகரித்துள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எரிசக்தி வர்த்தகம் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக சென்னைக்கும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள விளாடிவோஸ்டோக் துறைமுக நகருக்கும் இடையிலான கடல்வழிப் பாதை இணைப்பை வலுப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

அண்மைக் காலமாக விளாடிவோஸ்டோக் துறைமுகத்தை சீனக் கப்பல்கள் பயன்படுத்தி வருகின்றன.

அங்கிருந்து அவை மற்ற நாடுகளுக்குச் செல்கின்றன.

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததிலிருந்து மேற்கத்திய நாடுகள் அதன் மீது பல தடைகளை விதித்துள்ளன.

எனவே, வர்த்தகத்துக்கு ஆசியாவின் திசை நோக்கி ரஷ்யாவின் கவனம் திரும்பியுள்ளது.

கழிவு விலையில் ரஷ்யா அதன் எரிபொருளையும் நிலக்கரியையும் இந்தியாவுக்கு விற்கிறது.

இந்தியாவுக்கு ரஷ்யா விற்பனை செய்யும் எரிபொருள், நிலக்கரி ஆகியவை பேரளவில் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக விளாடிவோஸ்டோக்-சென்னை கடல்வழிப் பாதையில் செல்லும் ரஷ்யக் கப்பல்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.

2024 நிதி ஆண்டில் சென்னை துறைமுகம் 300,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யைக் கையாண்டதாகவும் 2025 நிதி ஆண்டில் அது 600,000 மெட்ரிக் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தகப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

கடந்த நான்கு மாதங்களில், சென்னை துறைமுகம் 400,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யைக் கையாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ஏப்ரல் 1லிருந்து மார்ச் 31ஆம் தேதிவரை நிதியாண்டாக எடுத்துகொள்ளப்படுகிறது.

வர்த்தக அம்சம் மட்டுமின்றி, இந்திய-பசிபிக் வட்டாரத்தில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் விளாடிவோஸ்டோக் துறைமுகத்துடனான கடல்வழி இணைப்புக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது.

எரிபொருள், எரிவாயு அதிகமுள்ள இடமாக விளாடிவோஸ்டோக் திகழ்கிறது.

மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளியலுக்கு இவை மிகவும் முக்கியம்.

இந்தியாவுடனான இணைப்பும் ரஷ்யாவுக்கு மிகவும் முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாரஷ்யாவர்த்தகம்துறைமுகம்