கியவ்: உக்ரேன் தலைநகர் கியவ், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா நடத்திய தீவிர ஏவுகணைத் தாக்குதலில், சிறு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக உக்ரேன் வட்டார ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதலின் பின்னணி
கியவ் வட்டார ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமர் கட்சியன்கோ தனது டெலிகிராம் பக்கத்தில் இத்தாக்குதல் குறித்துப் பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கியவ் நகருக்கு வடகிழக்கே அமைந்துள்ள புரோவரி மாவட்டத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் சிறு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவர் காயமடைந்துள்ள நிலையில் காயமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
புகிவ்கா கிராமத்தில் ஏவுகணைகளின் பாகங்கள் விழுந்ததில், இரண்டு அடுக்கு குடியிருப்பு வீடு ஒன்று முற்றிலும் தகர்ந்து தீக்கிரையானது.
அத்துடன் இரண்டு கார்கள், ஒரு சேமிப்புக் கிடங்கிலும் தீப்பற்றியதால் பல பொருள்கள் சேதமடைந்தன.
தலைநகரில் ஒலித்த வான்வழி எச்சரிக்கை
அண்மைக்காலமாக உக்ரேன் தலைநகரை இலக்கு வைத்து, தொலை தூரம் பாயக்கூடிய (பாலிஸ்டிக்) ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.
இத்தாக்குதலின்போது, கியவ் நகரில் ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்குத் திசையிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கான அச்சுறுத்தல் இருப்பதாக உக்ரேனிய விமானப் படை எச்சரித்ததை அடுத்து, பொதுமக்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான நிலப்பரப்புப் பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
கியவ் மாநகரப் பகுதியிலும் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் நான்கு பேர் காயமடைந்ததாக ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


