வாஷிங்டன்: உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, தமது நாட்டின்மீது ரஷ்யா பெரிய அளவிலான புதிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடையே பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பர்னம் உடனான சந்திப்புக் குறித்து ஸெலென்ஸ்கி டெலிகிராமில் பதிவிட்டார். புதிய விமானத் தற்காப்புக் கருவிகளைப் பெறுவது குறித்து உக்ரேன் அதன் நட்பு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார்.
“ரஷ்யா உக்ரேனுக்கு எதிராகப் பெரிய அளவிலான புதிய தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தற்போது உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது,” என்று திரு ஸெலென்ஸ்கி பதிவிட்டார்.
“உக்ரேனியர்கள் ஒவ்வொரு நாளும் ஏவுகணை, ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களின் மிரட்டலை எதிர்நோக்குகின்றனர். அத்தகைய சூழலில், ரஷ்யா மீதான தடைகளைத் தளர்த்துவது குறித்துக் கலந்துரையாட சாத்தியமே இருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.
ரஷ்யப் படைகள் நீண்டகாலமாக இரவில் ஆளில்லா வானூர்திகள், ஏவுகணைகள் மூலம் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்திவருகின்றன. அண்மை வாரங்களில் அவற்றின் உத்திகளை மாற்றி, நாள் முழுவதும் இடைவிடாத தாக்குதல்களை அவை நடத்தி வருவதாகத் திரு ஸெலென்ஸ்கி கூறினார்.
மேலும், அண்மை மாதங்களில் ஜெட் விமான இயந்திரங்களின் மூலம் இயங்கும் ஆளில்லா வானூர்திகளை மாஸ்கோ பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அவை அதிக உயரத்தில் பறந்து, ஆகாயத் தற்காப்பு அமைப்புகளின் பார்வையில் படாமல், நான்கரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் போரில் முன்பு இருந்ததைவிடப் பெரிய அளவில் வணிகங்கள், அரசாங்கம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கின்றன.
இந்நிலையில், நியூயார்க்கில் இருந்தபோது, எரிசக்தி தொடர்பான இலக்குகள் குறித்து உத்தேச இருதரப்புச் சண்டைநிறுத்தம் உட்பட, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் திரு ஸெலென்ஸ்கி கலந்துபேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
