உக்ரேனை ஏவுகணைகளால் துளைத்தெடுத்த ரஷ்யா

1 mins read
327c3bca-995d-4fbf-ad0c-e5dc0c47ea24
ரஷ்யா நடத்திய தாக்குதல் காரணமாக உக்ரேனில் உள்ள பல இடங்கள் தீப்பிடித்து எரிந்தன. - படம்: ஏஎஃப்பி

கியவ்: ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று உக்ரேனை ரஷ்யா துளைத்தெடுத்ததாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது.

இதில் குறைந்தது நால்வர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உக்ரேனின் பல பகுதிகள் நிலைகுலைந்தன.

ரஷ்யா நடத்திய தாக்குதலில் உருத் தெரியாமல் அழிந்த ஹோட்டல் ஒன்றில் இருந்த இருவர் மாண்டதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.

மற்ற இருவர் ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் மாண்டனர்.

உக்ரேனியத் தலைநகர் கியவ்வைக் குறிவைத்து ரஷ்யா பாய்ச்சிய ஏவுகணைகளையும் அனுப்பிய ஆளில்லா வானூர்திகளையும் எதிர்கொண்டு முறியடிக்கும் பணியில் உக்ரேனியப் போர் விமானங்கள் இரவு முழுவதும் ஈடுபட்டன.

தலைநகர் கியவ்வில் மூன்று வெடிப்புகள் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று உக்ரேன் மீது ரஷ்யா இதற்குமுன் இல்லாத அளவில் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது.

ரஷ்யா 200க்கும் அதிகமான ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஏழு பேர் மாண்டனர். உக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பும் சேதமடைந்தது.

இத்தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்