மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சீனாவுக்குப் பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படும் வேளையில், சீனாவுக்கு எரிசக்தி விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் புதன்கிழமை (ஏப்ரல் 15) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு லாவ்ரோவ் இதனைக் கூறியதை ரஷ்யச் செய்தி நிறுவனங்கள் மேற்கோள் காட்டின. திரு புட்டினின் பயணம் மே 18ஆம் தேதி வாரத்தில் இடம்பெறும் என ரஷ்ய நாளிதழ் ஒன்று குறிப்பிட்டது.
திரு புட்டினின் சீனப் பயணம் 2026 முற்பாதியில் அமையும் என்று ரஷ்ய ஊடகங்கள் அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டன.
சீன அதிபர் ஸி ஜின்பிங், திரு லாவ்ரோவைப் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது, ரஷ்யாவுடனான சீனாவின் நட்புறவை உறுதிப்படுத்திய அவர், இரு நாடுகளும் ஒன்றையொன்று நம்பி, ஆதரிக்க வேண்டும் என்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தி இருதரப்பு நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கும் இதர நாடுகளுக்கும் எரிசக்தி விநியோகம் மூலம் உதவ ரஷ்யா தயாராக இருப்பதாகச் செய்தியாளர்களிடம் திரு லாவ்ரோவ் கூறினார்.
“சீனாவும் எங்களோடு சமமான, பரஸ்பர நலன் சார்ந்த அடிப்படையில் இணைந்து செயல்பட விரும்பும் நாடுகளும் எதிர்கொள்ளும் எரிசக்தித் தட்டுப்பாட்டை ரஷ்யாவால் ஈடுகட்ட முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு மோதல் மூலம் உலகளாவிய எரிசக்திச் சந்தைகளைச் சீர்குலைக்க அமெரிக்கா முற்படுவதைச் சுட்டிய அவர், அத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்கத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் ரஷ்யாவும் சீனாவும் கொண்டுள்ளதாகக் கூறினார்.

