மாஸ்கோ: கிரைமியா தீபகற்பத்தின்மீது பறந்த உக்ரேனால் ஏவப்பட்ட 42 ஆளில்லா வானூர்திகளை அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கலுகாப் பகுதியைத் தாக்குவதற்காக உக்ரேனால் ஏவப்பட்ட ஏவுகணையையும் ரஷ்ய ஆகாயத் தற்காப்புப் படை அழித்துவிட்டதாக அந்நாட்டு அமைச்சு கூறியது.
அதில் ஒன்பது ஆளில்லா வானூர்திகளை ரஷ்ய ஆகாயத் தற்காப்புப் படை அழித்ததாகவும் மின்னணுக் கருவிகள் மூலம் 33 ஆளில்லா வானூர்திகளை அதனுடைய இலக்கை அடையவிடாமல் செயலிழக்கச் செய்ததாகவும் அமைச்சு தெரிவித்தது.
உக்ரேன் வசமிருந்த கிரைமியாவை 2014ஆம் ஆண்டில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
உக்ரேனால் நடத்தப்பட்டது என ரஷ்யாவால் குற்றஞ்சாட்டப்படும் இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ரஷ்ய விமான நிலையங்களில் மட்டும் சில மணி நேரம் விமானச் சேவை நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

