மாஸ்கோ: ஒன்பது உக்ரேனிய வானூர்திகளை சுட்டு வீழ்த்திவிட்டதாக ரஷ்யா தெரிவித்து உள்ளது.
அவற்றில் இரண்டு கருங்கடல் வட்டாரத்தில் வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு புதன்கிழமை (மார்ச் 26) கூறியது.
கருங்கடல் பகுதியில் ரஷ்யாவும் உக்ரேனும் சண்டையிடுவதை நிறுத்த அமெரிக்கா கடந்த செவ்வாய்க்கிழமை உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தியது.
இரு நாடுகளும் ஒன்று மற்றொன்றின் எரிசக்தி இலக்குகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதையும் தடுக்க அந்த உடன்பாடு வலியுறுத்துகிறது.
அந்த உடன்பாட்டின்கீழ், மாஸ்கோ மீதான பொருளியல் தடைகள் சிலவற்றை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டு உள்ளது.
இருப்பினும், கருங்கடல் வட்டார சண்டை நிறுத்த உடன்பாடு எப்போது நடப்புக்கு வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மேலும், வீழ்த்தப்பட்ட வானூர்திகள் கருங்கடல் வட்டார இலக்குகளைக் குறிவைத்துச் சென்றனவா அல்லது கருங்கடல் நீரின் மேல் பகுதியில் பறந்தனவா என்பதும் தெளிவாகவில்லை.
எத்தனை வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று மட்டுமே ரஷ்ய தற்காப்பு அமைச்சு கூறியது. அவற்றில் உக்ரேன் ஏவியது எத்தனை என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

