கியவ்: ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள குர்ஸ்க் பகுதிக்குள் நுழைந்து உக்ரேனியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு கூறியது.
இதையடுத்து, அப்பகுதிக்கு ரஷ்யப் படைகள் விரைந்தன.
குர்க்ஸ் பகுதியில் உக்ரேனுடனான எல்லையோரத்தில் இருக்கும் இடங்களிலிருந்து மக்களை ரஷ்ய அதிகாரிகள் பத்திரமாக வெளியேற்றினர்.
எல்லையோரப் பகுதிகளுக்குக் கூடுதல் ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் ரஷ்யா அனுப்பிவைத்துள்ளது.
பீரங்கிகள், கவச வாகனங்கள், கனரக வாகனங்கள் போன்றவை எல்லையோரப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறியது.
தாக்குதலில் ஏறத்தாழ 1,000 உக்ரேனிய ராணுவ வீரர்கள் ஈடுபட்டதாகவும் பல கவச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல் குறித்து உக்ரேன் அதிகாரபூர்வத் தகவல்களை வெளியிடவில்லை.
இருப்பினும், படையெடுப்பிற்கான விளைவுகளை ரஷ்யா உணர வேண்டும் என்று ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இது ஒருபுறம் இருக்க, உக்ரேனுடனான மூன்று எல்லையோரப் பகுதிகளில் ரஷ்யா பாதுகாப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இவற்றைப் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என ரஷ்யா வகைப்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் ரஷ்ய ராணுவத்துக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் பேரளவிலான அவசரநிலை அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள இடங்களில் ஆள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் கைப்பேசி அழைப்புகளைக் கண்காணிக்கவும் சோதனைச்சாவடிகள் அமைத்து சோதனையிடவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உக்ரேனின் ஆக அண்மைய தாக்குதல் ரஷ்யாவைத் தூண்டிவிடும் வகையில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சாடினார்.
எல்லையைத் தாண்டி ரஷ்யாவுக்குள் புகுந்த உக்ரேனியப் படையினர் மேற்கொண்டு செல்ல முடியாதபடி அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டதாக ரஷ்ய உயர் ராணுவ அதிகாரியான ஜெனரல் வெலரி கெரசிமோவ் கூறினார்.
ஆனால் எதிரிப் படையினரை ரஷ்ய மண்ணிலிருந்து இன்னும் துரத்தியடிக்கவில்லை என்றார் அவர்.
எல்லையோரப் பகுதியில் ரஷ்யப் படைகளுக்கும் உக்ரேனியப் படைகளுக்கும் மிகக் கடுமையான சண்டை நடந்து வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரேன் நடத்திய எதிர்பாராத் தாக்குதலை ரஷ்ய ராணுவம் திறம்பட, மிக துரிதமான முறையில் எதிர்கொண்டதாக ரஷ்ய ராணுவத்துக்குச் சொந்தமான சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டது.
இருப்பினும், உக்ரேனியப் படைகளால் எப்படி மிக எளிதாக எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் நுழைய முடிந்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தாக்குதல் குறித்து உக்ரேன் கருத்து தெரிவிக்கவில்லை.
இருப்பினும், ரஷ்யாவின் எல்லையோர நகரமான சுட்ஸாவில் உள்ள எரிவாயு அளவிடும் நிலையம் உக்ரேனியப் படையினர் வசம் இருப்பதைக் காட்டும் காணொளியை உக்ரேனிய ஊடகம் ஒளிபரப்பியது.
அங்கிருந்துதான் ரஷ்யாவுக்குச் சொந்தமான இயற்கை எரிவாயு உக்ரேன் வழியாக ஐரோப்பாவுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்தக் காணொளி எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
இதற்கிடையே, உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள பேரங்காடி மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 14 பேர் மாண்டதாக உக்ரேன் தெரிவித்தது.
தாக்குதலின் காரணமாக 43 பேர் காயமடைந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.
இந்தப் பயங்கரத் தாக்குதலுக்கு ரஷ்யாதான் பொறுப்பேற்க வேண்டும்,” என்று டெலிகிராம் செயலியில் அதிபர் ஸெலென்ஸ்கி பதிவிட்டார்.

