நியூயார்க்: ஐரோப்பிய நாடுகளான போலந்து, ருமேனியாவுக்கு எதிராக அந்நாட்டு ஆகாய வெளியில் வானூர்திகளை ரஷ்யா அனுப்பியுள்ளது.
அத்துடன், மற்றோர் ஐரோப்பிய நாடான எஸ்டோனிய ஆகாய வெளிக்குள் போர் விமானங்களைப் பறக்கவிட்டுள்ளது. மேலும், பால்டிக் கடலில் ஜெர்மானிய போர்க்கப்பலை சீண்டியதுடன் இவ்வாரம் மால்டாவாவில் நடக்கும் பொதுத் தேர்தல் முடிவு தனக்கு சாதகமாய் இருக்க அங்கு பலத்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இவை யாவும் கடந்த மூன்று வாரங்களில் மட்டுமே நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் இதுபோன்ற நடவடிக்கைகளால் அதிர்ந்துபோயுள்ள ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள், டோனல்ட் டிரம்ப் தலைமையின் கீழுள்ள அமெரிக்கா ரஷ்யாவைத் துணிவுடன் எதிர்ப்பதிலிருந்து சற்றே ஒதுங்கியுள்ள நிலையில், தங்கள் நாடுகளுக்கு எதிராக ரஷ்யா செயல்படத் தொடங்கியுள்ளதை எண்ணிப் பதற்றத்தில் உள்ளனர்.
ஐரோப்பியத் தலைவர்களின் பதற்றம் டென்மார்க், நார்வே போன்ற நாடுகளிலும் எதிரொலிக்கிறது. அந்நாடுகளின் ஆகாய வெளியில் காரணமில்லாமல் வானூர்திகள் பறப்பதால் அந்த நாடுகள் தங்கள் விமான நிலையங்களை மூட வேண்டியுள்ளது. ரஷ்யாதான் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று டென்மார்க் பிரதமர் கூறியுள்ளார். இதை மறுத்த ரஷ்யா அச்சத்தினால் எற்படும் தேவையில்லாத மிதமிஞ்சிய உணர்ச்சிப் பெருக்கு ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களின் அச்சத்தை வர்ணித்துள்ளது.
இந்நிலையில், மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட சிறிய நாடான மால்டோவாதான் ரஷ்ய அதிகார மமதையை அதிகம் உணர்வதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
இதுபற்றிக் கூறும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் திருவாட்டி மாய்யா சாண்டு மால்டோவாவில் ரஷ்யக் குற்றக் கும்பல்கள் கிளர்ச்சியைத் தூண்டிவிட சதி நடந்துள்ளது என்றும் இதில் 74 பேரை அந்நாடு கைது செய்துள்ளது என்றும் விளக்கினார்.
“ரஷ்யா எங்கள் நாடு விலைபோகக்கூடிய ஒன்று என நினைக்கிறது. இது ஒரு சிறிய நாடு என்றும் இது ஒரு நாடே அல்ல, ஒரு பகுதிதான் என்றும் கருதுகிறது,” என திருவாட்டி சாண்டு மால்டோவிய மக்களைப் பார்த்து செப்டம்பர் 22 அன்று கூறியுள்ளார். எனினும், மால்டோவா தங்கள் இல்லம் என்றும் அது ஒன்றும் விற்பனைக்கு இல்லை என்றும் அவர் தெளிவுபடத் தெரிவித்தார்.