தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முழுவீச்சில் இறங்கும் ரஷ்யா: உக்ரேன் அதிபர் எச்சரிக்கை

1 mins read
7e4f4f94-5c06-4f94-a08b-302ca06c98aa
உக்ரேனியப் படைகளின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த ரஷ்யா தன்னாலான அனைத்தையும் செய்துவருவதாக உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். - படம்: ஏஎஃப்பி

கியவ்: உக்ரேன் படைகள் எதிர்த்தாக்குதலில் இறங்குவதைத் தடுத்து நிறுத்த ரஷ்யா தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி வருவதாக உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தென்பகுதியில் உக்ரேனியப் படைகள் முன்னேற்றம் கண்டுவருவதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், திரு ஸெலென்ஸ்கியின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

“நம் நாட்டின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் நம் படையினரைத் தடுத்து நிறுத்த ரஷ்யா தன்னாலான அனைத்தையும் செய்து வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்,” என்று காணொளி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது ஸெலென்ஸ்கி கூறினார்.

“நாம் முன்னேறும் ஒவ்வோர் ஆயிரம் மீட்டருக்கும், ஒவ்வொரு படைப்பிரிவினரின் ஒவ்வொரு வெற்றிக்கும் நாம் நன்றியுடையவர்களாகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.

ஆயினும், தெற்கு நோக்கி மேலும் முன்னேற உக்ரேனியப் படைகள் முயன்றுவரும் நிலையில், அது மிகவும் சிரமம் என்று உக்ரேன் ராணுவப் பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உக்ரேனின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் ரஷ்யப் படையினர் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் தம்வசப்படுத்த உக்ரேனியப் படைகள் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றன.

குறிப்பாக, கிழக்கில் பக்முத் நகரையும் அஸோவ் கடற்பகுதியை ஒட்டியும் அமைந்துள்ள கிராமப் பகுதிகளை ரஷ்யாவிடமிருந்து மீட்க உக்ரேனியப் படைகள் இலக்கு கொண்டுள்ளன.

இதனிடையே, கிழக்கில் பக்முத் நகரையும் அதனைச் சுற்றிய பகுதிகளையும் உள்ளடக்கிய டொனெட்ஸ்க் வட்டாரத்தில் உக்ரேனின் 16 தாக்குதல் நடவடிக்கைகளைத் தனது படைகள் முறியடித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்