வாஷிங்டன்: ரஷ்யா, உக்ரேன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், அபுதாபியில் முத்தரப்பு சந்திப்புக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) நடத்தவிருப்பதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் விளாடிமிர் புட்டின் மாஸ்கோவில் அமெரிக்க அதிகாரிகளுடன் வியாழக்கிழமை (ஜனவரி 22) நடத்திய சந்திப்புக்குப் பிறகு ரஷ்ய அதிகாரிகள் முத்தரப்புக் கூட்டத்துக்கு வரவிருப்பதை உறுதிசெய்துள்ளனர்.
மாஸ்கோவில் மிகவும் ‘மரியாதையான, பயனுள்ள’ சந்திப்பு நடந்துள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும் அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு எல்லையில் உள்ள முரண்பாடுகள் முதலில் தீர்க்கப்படவேண்டும் என்று ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஐரோப்பிய பங்காளி நாடுகளுக்கு ‘அரசியல் தயக்கம்’ ஏற்பட்டுள்ளது என்று சாடினார்.
மாஸ்கோ சந்திப்பில் அதிபர் புட்டினுடன் இரண்டு ரஷ்ய அதிகாரிகள் உடன் இருந்தனர். அவர்களோடு அமெரிக்கத் தரப்பில் மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கொவ், அதிபர் டிரம்ப்பின் மருமகன் ஜாரட் குஷ்னர் உள்பட மூவர் கலந்துகொண்டனர்.
கிரெம்ளின் சார்பாக அதில் இருந்த ரஷ்ய அதிகாரி யூரி உஷகோவ், சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தாலும் உக்ரேனுடனான எல்லை வரைவுகள் தீராமல் அமைதி உடன்பாட்டை எட்டமுடியாது என்பதை வலியுறுத்தினார்.
“எல்லை முரண்பாடு சீரமைக்கப்படும்வரை அதன் இலக்குகளை அடைய சிறப்பு ராணுவச் செயல்பாடுகளைத் தொடர்ந்து ரஷ்யா முன்னெடுத்தாலும் அரசதந்திர முறையில் அமைதிக்கான வழிவகைகளை நாடவும் அது உண்மையாகவே விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.
உக்ரேனின் முக்கிய சிக்கலாக, அதன் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் 25 விழுக்காட்டை ரஷ்யா தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிறது. அதோடு கடந்த 2022ல் ரஷ்யா கைப்பற்றிய சபரொசியாவில் உள்ள அணுவாயுத ஆலையையும் எதிர்காலத்தில் விட்டுக்கொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனையும் உக்ரேனுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அமைதி உடன்பாட்டுக்கு இணங்குவதற்கு முன்பாக சில பகுதிகளை விட்டுக்கொடுப்பதற்கு ரஷ்யாவும் தயாராக இருக்கவேண்டும் என்று உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி எதிர்பார்க்கிறார். ஆனால், ரஷ்யா அதற்கு இடம் தருவதுபோல் இல்லை.

