கியவ்: உக்ரேன் தலைநகர் கியவ் அருகே இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர். அவர்களில் மூவர் குழந்தைகள், நான்காமவர் ஒரு பெண்.
இந்தத் தகவலை கியவ் வட்டார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) தெரிவித்தனர்.
ரஷ்யாவின் வானூர்தித் தாக்குதலில் வீட்டுக்குள் இருந்த பெண் ஒருவரும் அவரது இரு குழந்தைகளும் பலியானதாக உக்ரேனின் அவசரகால சேவைப் பிரிவு தெரிவித்தது.
வேறொரு வட்டாரத்தில் நடத்தப்பட்ட மற்றொரு வானூர்தித் தாக்குதலில் சிறுமி ஒருவர் காயமடைந்து, மருத்துவமனையில் மாண்டதாக கியவ் நகர ஆளுநர் தைமுர் தக்காச்சங்கோ கூறியுள்ளார்.
தங்கள் பகுதி நாள் முழுவதும் எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் ஐந்து மாவட்டங்களில் உள்ள 31 இடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தலைநகர் மாஸ்கோவைக் குறிவைத்து உக்ரேன் வானூர்தித் தாக்குதல் நடத்தியது.
அதில் மாஸ்கோவைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் இருவர் உயிரிழந்தனர். மேலும், அங்குள்ள எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை மீண்டும் தாக்கப்பட்டதாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.
ரஷ்யத் தலைநகரின் மீது உக்ரேன் நடத்திய ஆகப்பெரிய வானூர்தித் தாக்குதல் இதுவென மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார்.
ஆயினும், ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிநாளைச் சீர்குலைக்க உக்ரேன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாக அவர் கூறினார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் போருக்கு மக்களின் ஆதரவைச் சோதிக்கும் களம் என்று அந்தத் தேர்தலை அதிபர் விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டிருந்தார்.
