தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஷ்யா- உக்ரேன் போர்: ஐநா வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவு; இந்தியா, சீனா புறக்கணிப்பு

2 mins read
0164c580-57b4-4352-a9ea-f9a1558d195e
நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) உக்ரேன் மீதான அமெரிக்க தீர்மானத்தின் மீது ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் ஐநாவுக்கான அமெரிக்க துணை தூதர் டோரதி ஷியா வாக்களித்தார். - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் குறித்த ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்துள்ளது.

இந்தத் தீர்மானம் உக்ரேன் போர் தொடர்பான முந்தைய தீர்மானங்களைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்த ஆதரவைப் பெற்றுள்ளபோதும் அது ரஷ்யாவைக் குறைகூறுவதுடன் உக்ரேனின் இறையாண்மை, அதன் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஆழமாக வலியுறுத்துகிறது.

இதில் இந்தியாவும் சீனாவும் வாக்களிப்பைப் புறக்கணித்தன.

உக்ரேனில் இருந்து ரஷ்யப் படைகளை உடனடியாகத் திரும்ப பெற வலியுறுத்தி ஐநாவில் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பதற்றத்தைக் குறைக்கவும், போர் நடவடிக்கைகளை முன்கூட்டியே நிறுத்தவும், உக்ரேனுக்கு எதிரான போரை அமைதியான முறையில் தீர்க்கவும் இந்த தீர்மானம் வலியுறுத்தியது.

தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 93 நாடுகள் ஆதரவாகவும், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, சீனா, உட்பட 63 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உக்ரேன் நேட்டோ கூட்டமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, உக்ரேன் மீது 2022ல் போர் தொடுத்தது. உக்ரேனும் பதிலடி கொடுத்தது. உக்ரேனுக்கு அமெரிக்கா உள்பட பல மேற்கத்திய நாடுகள் நிதி, ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன.

இதனால், ரஷ்யாவுக்கு கடும் சவாலை உக்ரேன் கொடுத்து வருகிறது. போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

உக்ரேன், ஐரோப்பிய நாடுகள் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் அமெரிக்கா அதன் நீண்டகால ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் முரண்பட்டுள்ளது. மாறாக முழு அளவிலான உக்ரேன் மீதான படையெடுப்பின் மூன்று ஆண்டு நிறைவில், ஆக்கிரமிப்பாளருடன் இணைந்துள்ளது.

ரஷ்யாவை ஆக்கிரமிப்பாளர் என்று அழைக்காத அல்லது உக்ரேனின் பிரதேச உரிமையை அங்கீகரிக்காத அமெரிக்கா முன்வைத்த போட்டி ஐநா பாதுகாப்பு மன்றம் தீர்மானத்தின் மீது திங்களன்று ரஷ்யா எப்படி வாக்களித்ததோ, அதே வழியில் அமெரிக்காவும் மீண்டும் வாக்களித்தது. பாதுகாப்பு மன்றத்தின் ஐந்து ஐரோப்பிய உறுப்பு நாடுகளின் ஆதரவு இல்லாமல் இந்தத் தீர்மானம் நிறைவேறியது.

டிரம்ப் நிர்வாகம் மாஸ்கோவுடன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஐநாவில் ரஷ்யா உடனான அமெரிக்காவின் அதிர்ச்சியூட்டும் அணிசேர்ப்பு இடம்பெற்றுள்ளது. அதிபர் டிரம்ப், உக்ரேன் போரை எப்படியாவது, உடனடியாக நிறுத்தும் போக்கில் உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியைக் குறைகூறி வருகிறார். அமெரிக்காவின் இந்தப் போக்கை மாற்றும் முயற்சியில் பிரெஞ்சு அதிபர் மெக்ரோன் டிரம்ப்பை திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

குறிப்புச் சொற்கள்