கியவ்: உக்ரேனின் கியவ் வட்டாரத்தில் உள்ள டைமர் நகரில் ரஷ்யா நடத்திய இரவுநேரத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலால் இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டடத்தின் இடிபாடுகளிலிருந்து ஏழு வயதுச் சிறுவன் 14 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அதிகாரிகள், அவனைக் காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி கூறினர்.
சிறுவன் மீட்கப்பட்டதை அதிபர் ஸெலென்ஸ்கியும் தேசியக் காவல்துறையும் உறுதிசெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) அதிகாலை 5.00 மணி வாக்கில் அத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரேனிய உள்துறை அமைச்சு தெரிவித்தது.
தாக்குதலால் பாதிக்கப்பட்ட கட்டடத்திலிருந்து 79 வயது மூதாட்டியும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலில் சிலர் காயமடைந்ததாகவும் சிலரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர், வெடிபொருள் நிபுணர்கள், மோப்ப நாய்க் குழுவினர், மருத்துவக் குழுவினர் என 130க்கும் மேற்பட்டோர் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
“பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரைப் பற்றியும் முழுமையான தகவல்கள் கிடைக்கும் வரை அவசர மீட்புப் பணிகள் தொடரும்,” என்று அதிபர் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
தொடர்ந்து விடுக்கப்படும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளாலும் புதிய மிரட்டல்களாலும் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையே, பிலா செர்க்வா நகரில் உள்ள தனியார் வீட்டின் மீதான தாக்குதலில் ஒருவர் மாண்டார். அதேவேளையில், விஷ்னேவ் நகரில் உள்ள ஒரு கடையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்; 13 பேர் காயமடைந்தனர்.
டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் வட்டாரத்திலுள்ள துணை மின்நிலையத்தையும் ரஷ்யா தாக்கியதாக உக்ரேனிய அரசு உறுதிசெய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி உக்ரேனின் 10 வட்டாரங்களில் 70க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது.
