ரஷ்யத் தாக்குதல் எதிரொலி: உக்ரேனில் அவசரகால மின்சாரக் கட்டுப்பாடு

1 mins read
a363d38d-b250-4f98-a186-69fc79f8c90f
எரிவாயுக் கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் தாக்குதலை உறுதிப்படுத்தினார் உக்ரேனிய மின்துறை அமைச்சர் ஜெர்மன் கலுஷென்கோ. - படம்: ராய்ட்டர்ஸ்

கியவ்: தனது எரிவாயு உட்கட்டமைப்புமீது இரவிலும் காலையிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதை அடுத்து, உக்ரேன் அவசரகால மின்சாரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

“இரவு முழுவதும் எதிரி நமது எரிவாயுக் கட்டமைப்புமீது தாக்குதல் நடத்தியது. காலையிலும் அது நீடித்தது,” என்று உக்ரேனிய மின்துறை அமைச்சர் ஜெர்மன் கலுஷென்கோ செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 11) சமூக ஊடகம் வழியாகத் தெரிவித்தார்.

ரஷ்யாவின் எறிகணைத் தாக்குதல்களால் மிர்ஹோரோட் மாவட்டத்தில் ஒன்பது குடியிருப்புப் பகுதிகளில் எரிவாயு விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று போல்டோவா வட்டார ராணுவ நிர்வாகம் கூறியது.

முன்னதாக, உக்ரேனின் மின்கட்டமைப்புகளைக் குறிவைத்து எறிகணை, ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நடத்திவந்த ரஷ்யா, இப்போது தன் கவனத்தை எரிவாயு உற்பத்தி, சேமிப்பு நிலையங்கள்மீது திருப்பியுள்ளது.

இதனிடையே, எரிவாயு இறக்குமதி 16.3 மில்லியன் கனஅடியிலிருந்து 16.7 மில்லியன் கனஅடியாக உயர்த்தப்படலாம் என்று உக்ரேனின் எரிவாயு விநியோக அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, போலந்து ஆகிய நாடுகளிலிருந்து எரிவாயு இறக்குமதி செய்யப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

ரஷ்யத் தாக்குதலை அடுத்து கடந்த வாரத்திலிருந்தே உக்ரேன் தனது எரிவாயு இறக்குமதியை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உக்ரேன் குளிர்காலத்தில் நாளொன்றுக்கு 110 முதல் 140 மில்லியன் கனஅடி வரையிலான எரிவாயுவைப் பயன்படுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்