கியவ்: உக்ரேனின் மத்திய நகரமான கிரிவீ ரீயில் உள்ள கடைத்தொகுதியின் மீது ரஷ்யா நடத்திய இரட்டை ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் 15 பேர் மாண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் 23 குழந்தைகள் உட்பட மேலும் 130 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, தமது சொந்த ஊரில் பகல் நேரத்தில் மிகவும் கொடூரமான, இழிவான அந்தத் தாக்குதல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது என்றும் இரண்டாவது தாக்குதல் சம்பவ இடத்திற்கு வந்த அவசரகால மீட்புப் பணியாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டது என்றும் கூறினார்.
நிப்ரோபெட்ரோவ்ஸ்க் வட்டாரத்தில் ஏற்கெனவே தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த கடைத்தொகுதியின் மீது இரண்டாவது ஆளில்லா வானூர்தி மோதுவது காணொளியொன்றில் தெளிவாகத் தெரிகிறது. அந்தக் காணொளியின் நம்பகத்தன்மையை பிபிசி ஊடகம் உறுதிசெய்தது.
உக்ரேனின் மற்ற நான்கு வட்டாரங்களைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் உதவ அவசரமாக அனுப்பப்பட்டு வருகின்றனர். தாக்குதல் நடந்த கடைத்தொகுதியில் பரவிய தீயை அணைக்க அவர்கள் கடுமையாகப் போராடினர்.
தாக்குதல் குறித்து ரஷ்ய ராணுவம் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.


