உக்ரேன் மீது ரஷ்ய வானூர்தித் தாக்குதல்; பலர் காயம்

1 mins read
fa7f92c6-469a-4312-8ee7-0b97398244ff
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள வேளையில், வான் வெளியில் விளக்கு வெளிச்சம் பாய்ச்சி ரஷ்ய வானூர்திகளைத் தேடும் உக்ரேனிய படையினர். - படம்: ராய்ட்டர்ஸ்

கியவ்: உக்ரேனியத் தலைநகர் கியவ் மீது சனிக்கிழமை (மார்ச் 22ஆம் தேதி) ரஷ்யா நடத்திய வானூர்தித் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்தனர்.

“மிகப் பெரிய வானூர்தித் தாக்குதல் ஒன்று கியவ் மீது மேற்கொள்ளப்பட்டது. இதுவரை ஏழு குடியிருப்பாளர்கள் காயமடைந்ததாகத் தெரிகிறது. அதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,” என்று கியவ் மேயர் விட்டாலி கிளிட்ஸ்கோ விவரித்தார். 

மேலும், பல இடங்களில் தீ மூண்டதால் அந்தந்த வட்டாரங்களுக்கு அவசரநிலை சேவை வழங்கப்பட்டதாக அவர் கூறினார். 

சுட்டு வீழ்த்தப்பட்ட வானூர்திப் பாகங்கள் டினிப்பேரா வட்டாரத்தின் ஆற்றுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் மீது விழுந்து தீ மூண்டதாக கியவ் ராணுவ ஆட்சித் தலைவர் திமுர் கச்சென்கோ டெலிகிராம் ஊடகத்தில் தெரிவித்தார்.  

தாக்குதல் எந்த அளவுக்கு பெரியது என்பதை உடனடியாகக் கூற முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறியது. எனினும், வான் வெளி தற்காப்பு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட அறிகுறியாக பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெளிவுபடுத்தியது.  

குறிப்புச் சொற்கள்