மாஸ்கோ: ரஷ்யாவில் ராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று கிரைமியாவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 29 பேரும் மாண்டுபோயினர்.
அவர்களில் ஆறு பேர் விமான ஊழியர்கள் என்று ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சு புதன்கிழமை (ஏப்ரல் 1) அதிகாலை தெரிவித்ததாக டாஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் அந்த அன்-26 (An-26) விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
“தேடி, மீட்கும் படையினர் விபத்திற்குள்ளான விமானத்தைக் கண்டுபிடித்தனர். அதிலிருந்த 23 பயணிகளும் ஆறு ஊழியர்களும் இறந்துவிட்டனர்,” என்று அமைச்சு தெரிவித்தது.
முதற்கட்ட மதிப்பீட்டின்படி, தொழில்நுட்பக் கோளாறே அந்த விமான விபத்திற்குக் காரணமாக நம்பப்படுகிறது என்று ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியது.
கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள கிரைமியா தீபகற்பத்தை உக்ரேனிடமிருந்து 2014ல் ரஷ்யா தன்வயப்படுத்தியது.
இரு எந்திரங்களைக் கொண்ட ‘டர்போபிராப்’ (turboprop) வகையைச் சேர்ந்த அன்-26 விமானம், 40 படை வீரர்கள்வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. வான்குடை வீரர்கள் குதிப்பதற்கும் காயமுற்றோரை வெளியேற்றுவதற்கும் ஏற்ற வகையில் அந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

