கியவ்: உக்ரேனியத் தலைநகர் கியவ்விலும் மற்ற நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) காலை ரஷ்யா கடுமையான ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ரஷ்யா மேற்கொண்ட ஆகக் கடுமையான தாக்குதலாக இது கூறப்படுகிறது.
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் மின்கட்டமைப்பைக் குறிவைத்து அந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
“மின்கட்டமைப்பின் மீது மேலும் ஒரு பெரிய தாக்குதல் நடந்துள்ளது. உக்ரேன் முழுவதுமுள்ள மின்உற்பத்தி நிலையங்களையும் மின்விநியோக வசதிகளையும் எதிரிகள் தாக்குகின்றனர்,” என்று உக்ரேனிய எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்சென்கோ ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
கியவ் வான்வெளியில் இரவு நேரத்தில் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தித் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. காலையில் ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்ற வேளையில் தொடர்ந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டது.
சேதம் குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளிவரவில்லை. கியவ் உட்படப் பல்வேறு நகரங்களுக்கு மின்விநியோகத்தை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். சேதம் அதிகமாவதைத் தடுக்கும் நோக்கில் இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் கூறினர்.
உக்ரேனின் வடமேற்குப் பகுதியான வொலைனில் எரிசக்தி உள்கட்டமைப்பு சேதமடைந்ததாகக் கூறப்பட்டது. மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தெற்கிலுள்ள மைக்கோலைவ் வட்டாரத்தில் ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது.
தொடர்புடைய செய்திகள்
“அமைதியான நகரங்கள், உறங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள், முக்கிய உள்கட்டமைப்பு மீது ரஷ்யா மிகப் பெரிய ஆகாயத் தாக்குதலை நடத்தியுள்ளது,” என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் அண்ட்ரி சிபிஹா கூறினார்.
ரஷ்ய ஏவுகணைகள் குறித்துத் தொடர்ந்து தகவல்களை வழங்கிவரும் உக்ரேனிய ஆகாயப் படை, குடியிருப்பாளர்கள் வெளியே வரவேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.
இவ்வேளையில், உக்ரேனின் மேற்கே அமைந்திருக்கும் போலந்து,பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது ஆகாயப் படையை அதிகபட்சத் தயார்நிலையில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளது.
ரஷ்யா ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் தாக்குதலில் பயன்படுத்தியதாகப் போலந்து குறிப்பிட்டது.
முன்னதாக ஆகஸ்ட் 26ஆம் தேதி உக்ரேன் முழுவதும் ரஷ்யா மேற்கொண்ட ஆகாயத் தாக்குதலில் 200 ஆளில்லா வானூர்திகளும் ஏவுகணைகளும் பாய்ச்சப்பட்டன. அந்தத் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.