பால்ம்பீச், ஃபுளோரிடா: அமெரிக்காவின் தலைமையில் டிசம்பர் மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் ஃபுளோரிடா மாநிலத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடு இருநாள்கள் நடைபெறும்.
அந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விரும்பினால் கலந்துகொள்ளலாம் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (நவம்பர் 26) அவர் அக்கருத்தைத் தெரிவித்தார்.
அவர் வரவிரும்பினால் நிச்சயமாக வரலாம் என்ற அதிபர் டிரம்ப், ஒருசிலருக்கு புட்டின் வருவது ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். அதே நேரத்தில், அதிபர் புட்டின் மாநாட்டுக்கு வரவிரும்புவாரா என்ற சந்தேகமும் தமக்கு உள்ளது என்று திரு டிரம்ப் கூறினார்.
“என்னைக் கேட்டால் அவர் கலந்துகொள்வதை நான் விரும்புகிறேன்,” என்று தமது எண்ணத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்டார்.
புளோரிடா மாநிலத்தில் உள்ள கோல்ஃப் மைதான வளாகத்தில் அவர் அந்நாட்டின் நன்றி நவில்தல் விடுமுறையைக் கொண்டாடியபோது இக்கருத்துகளைத் தெரிவித்தார்.
ஜி20 மாநாட்டில் அதிபர் புட்டின் கலந்துகொள்வது குறித்து எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று ரஷ்யத் தலைநகரில் இயங்கும் கிரம்ளின் எனப்படும் அரசாங்க அமைப்பு உறுதிப்படுத்தியது.
நவம்பர் 19ஆம் தேதி சீனாவில் இரு பெரும் தலைவர்களும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் நேரடியாக சந்தித்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிபர் புட்டின் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வது குறித்துப் பரிசீலிக்கப்போவதாகக் கூறியிருந்தார்.
இருப்பினும் ரஷ்யாவில் தற்போதைய உள்நாட்டு நிலவரத்தைப் பொறுத்தே அமெரிக்க பயணம் சார்ந்த முடிவெடுக்க முடியும் எனவும் திரு புட்டின் அப்போது தெளிவுபடுத்தினார்.
வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்துக்கு முன்பு, ஐரோப்பா முழுவதும் ரஷ்யா அதன் ராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கினால் உக்ரேன் போருக்கான தீர்வை எட்ட அது வழிவகுக்கும் என்று தமது டுரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டிருந்தார்.
