கியவ்: ரஷ்யத் தாக்குதலுக்கு உள்ளான உக்ரேனின் பொக்ரொவ்ஸ்க் நகரின் கட்டட இடுபாடுகளில் மீட்புப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை தேடல் பணிகளை மேற்கொண்டனர்.
உக்ரேனின் கிழக்கு முன்னிலைப் பகுதியிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பொக்ரொவ்ஸ்க் நகரில் உக்ரேனியத் தாக்குதலை முறியடித்து வருவதாக மாஸ்கோ தெரிவித்தது.
இந்நகரில் முன்தினம் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது எழுவர் உயிரிழந்தனர்.
இரண்டு ஏவுகணைகளை 40 நிமிட இடைவெளியில் ரஷ்யா பாய்ச்சியது. அந்தத் தாக்குதலில் குடியிருப்புக் கட்டடங்கள், ஹோட்டல், விநியோக நிலையங்கள், கடைகள், நிர்வாகக் கட்டடங்கள் ஆகியவை சேதமடைந்ததாக டொனட்ஸ்க் வட்டார ராணுவ நிர்வாகத்தின் தலைவர் பாவ்லோ கிரிலெங்கோ தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட 67 பேர் காயமடைந்ததாக உக்ரேனின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
போருக்குமுன் இந்நகரில் ஏறக்குறைய 60,000 மக்கள் வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே, உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் குபியன்ஸ்க் நோக்கி முன்னேறிச் செல்வதாக ரஷ்யா திங்கட்கிழமை தெரிவித்தது. இப்பகுதியையும் கார்கிவ் வட்டாரத்திலுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளையும் உக்ரேனியப் படை செப்டம்பர் மாதம் மீட்டது. ஆனால், ரஷ்யா மீண்டும் இப்பகுதியைத் தாக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் நடைபெற்ற சமாதான மாநாட்டுக்குப் பிறகு ‘மனநிறைவு’ அடைந்திருப்பதாக உக்ரேன் திங்கட்கிழமை கூறியது. இந்தியா, சீனா, அமெரிக்கா, உக்ரேன் உட்பட சுமார் 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டுக்கு ரஷ்யா அழைக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யாவின் பங்கேற்பு இல்லாமல் உக்ரேன் நெருக்கடிநிலை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என்று அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதர் இதுபற்றி கூறினார்.

