ர‌‌ஷ்யத் தேர்தலில் ஆச்சரியம் எதுவும் இல்லை: பிபிசி அறிக்கை

ர‌‌ஷ்யத் தேர்தலில் ஆச்சரியம் எதுவும் இல்லை: பிபிசி அறிக்கை

படம்: ராய்ட்டர்ஸ்

21 Sep 2026 - 11:11 am

2 mins read

மாஸ்கோ: ரஷ்யாவைப் பற்றிய பல தகவல்களைக் கணிப்பது கடினம். ஆனால், தேர்தலின் முடிவு அவற்றில் ஒன்று அன்று.

கிரெம்ளின் மாளிகையால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் ஓர் அரசியல் அமைப்பில், ஆளும் அதிகாரத்தைக் கொண்ட கட்சி ‘யுனைடெட் ரஷ்யா’. நாடாளுமன்றத்தின் மீதான பிடியை அது தக்கவைத்துக் கொள்ளும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

எந்தவோர் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இதில் இல்லை. வேறு எந்தக் கட்சியும் அதற்கு நெருக்கமாகக் கூட வரவில்லை என்கிறது பிபிசி ஊடகத்தில் வெளியான ஓர் அறிக்கை.

‘யுனைடெட் ரஷ்யா’ கட்சி, ர‌‌ஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையில் அதன் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ளும் பாதையில் இருப்பதை முதற்கட்ட முடிவுகள் காட்டுகின்றன.

உக்ரேனுக்கு எதிரான நான்கரை ஆண்டுகளுக்கும் மேலான போருக்குப் பிறகும் இந்த நிலை தொடர்கிறது. இந்தப் போரினால் ரஷ்ய ராணுவத்திற்குப் பேரளவில் போர்க்கள இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பொருளியல் நெருக்கடி உருவாகியுள்ளது. மேலும் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரேன் நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களால் பெட்ரோல் தட்டுப்பாடும் உண்டாகியுள்ளது.

தேர்தலில் 5 விழுக்காட்டு வாக்குகள் பெறவேண்டும் என்ற வரம்பைக் கடந்து புதிய கீழவையில் காலடி எடுத்துவைத்துள்ள கட்சிகள், முந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றவையே என்று தெரிகிறது.

மேலும், அந்தக் கீழவை முழுமையாகக் கிரெம்ளின் மாளிகைக்கும் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்று அழைக்கப்படும் போருக்கும் ஆதரவாகவே இருந்தது.

ராணுவத்தினரை மீண்டும் திரட்டும் திட்டம் எதுவும் இல்லை என்று ர‌‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறிவருகிறார். ஆயினும் அத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிடுமோ என்ற கவலையில் ர‌‌ஷ்ய மக்கள் இருக்கின்றனர்.

நாடாளுமன்றத்திற்குள் ‘யாப்லோகோ’ கட்சியால் நுழைய முடியவில்லை. அது போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்தத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட முயன்றது. ஆனால், பதிவு செய்யப்பட்ட 12 நாள்களிலேயே உச்சநீதிமன்றத்தால் அது வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. அமைதிக்கான யாப்லோகோவின் செய்தி பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுவருகிறது என்ற கிரெம்ளினின் கவலையையே அது காட்டுவதுபோல் இருந்தது.

புதிய கீழவையும் முந்திய ஆட்சியைப் போலவே கட்டுப்பட்டு நடப்பதில் யாப்லோகோ கட்சிக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.

“தேர்தலில் 10 கட்சிகள் இருந்து, அவை அனைத்துமே புட்டினின் கொள்கைகளை ஆதரிக்கும்போது, வேறு என்ன முடிவு வரமுடியும்?” என்று யாப்லோகோ கட்சியின் தலைவர் நிக்கோலாய் ரிபாகோவ் கேள்வி எழுப்பினார்.

“கீழவை மாறும் என்று நான் நினைக்கவில்லை. முன்பு செய்தது போலவே அவர்கள் புட்டினின் கொள்கைகளுக்கு 100 விழுக்காடு ஆதரவாக வாக்களிப்பார்கள்,” என்றார் அவர்.

இந்தத் தேர்தல் முடிவைப் போரைத் தொடர்ந்து நடத்துவதற்கான, ‘மக்களின் ஆணை’யாகவே கிரெம்ளின் மாளிகை கருதும் என்று பிபிசி அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
ர‌ஷ்யாதேர்தல்முடிவுகள்புட்டின்