உக்ரேனில் ரஷ்யா கடும் தாக்குதல்; ஒன்பதுபேர் மரணம், பலர் காயம்

உக்ரேனில் ரஷ்யா கடும் தாக்குதல்; ஒன்பதுபேர் மரணம், பலர் காயம்

மக்கள்மீதும் பாரம்பரியம்மீதும் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்
படம்: ராய்ட்டர்ஸ்

15 Jun 2026 - 4:26 pm

2 mins read

கியேவ்: உக்ரேனியத் தலைநகர் கியேவ்வில் ரஷ்யா திங்கட்கிழமை (ஜூன் 15) மேற்கொண்ட கடுமையான தாக்குதலில் ஒன்பதுபேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

வடகிழக்கு மாநிலமான கார்கிவ்வில் நடந்த ரஷ்யத் தாக்குதலில் ஐவரும் அங்கு மூண்ட தீயை அணைக்கப் போராடிய மீட்புப் பணியாளர்களில் நால்வரும் மரணம் அடைந்ததை உக்ரேனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

தலைநகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்தவ தேவலாயமும் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பற்றி எரிவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் மறைந்துகொள்ளும்படி உக்ரேனிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ரஷ்யத் தாக்குதலில் 140,000 கியேவ் நகரவாசிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகிறார்கள் என்று ஆளுநர் பிடாலி கிலிட்ஸ்கோ டெலிகிராம் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

ஆளில்லா வானூர்திகளினால் (ட்ரோன்) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீடுகளிலும் வாகனங்களிலும் தீப்பிடித்துக்கொண்டது எனவும் அவர் தெரிவித்தார்.

உலகப் பாரம்பரியத் தளமாக அடையாளம் காணப்பட்ட 1051ஆம் ஆண்டுமுதல் நிறுவப்பட்டுவந்த கியேவ் லாவ்ரா தேவாலயம் கடுமையாக சேதமடைந்துள்ளது என மாநில ராணுவத் தற்காப்பு நிர்வாகத்தின் தலைவர் டிமொர் தக்சென்கோ சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

தயார் நிலையில் போலந்து

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரும் நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அண்டை நாடான போலந்து அதன் போர் விமானங்களையும் தற்காப்புக் கட்டமைப்பையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக அதன் ஆயுதப் படை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

“எங்கள் மக்கள்மீதும் பாரம்பரியம்மீதும் நடத்தப்பட்டுள்ள கொடூரமான தாக்குதல் இது,” என்று உக்ரேனியப் பிரதமர் கூலியா ஸ்விரிடென்கோ குறிப்பிட்டார். அவர் எக்ஸ் தளத்தில் செய்த அப்பதிவில் தேவாலயம் தீப்பற்றி எரிவது பின்புலத்தில் தெரிந்தது.

ரஷ்யாவில் உக்ரேன் தாக்குதல்

இதற்கிடையே, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் கிழக்கில் உள்ள துலா நகரில் உக்ரேன் நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் மூவர் பலியானதாகவும் ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
உக்ரேன்ர‌ஷ்யாதாக்குதல்தேவாலயம்சேதம்