கீவ்: ரஷ்யா, சனிக்கிழமையன்று ஏவுகணை, ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதில், உக்ரேனில் ஐந்து வட்டாரங்களில் உள்ள எரிசக்தி ஆலைகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தாக்குதல், கிழக்கு ‘டோனெட்ஸ்க்’, தென்கிழக்கில் உள்ள ‘ஸாப்போரிஸியா’, ‘நிப்புரொப்பெட்ரொவ்ஸ்க்’ பகுதிகள், மத்திய ‘கைரொவொஹ்ராட்’ வட்டாரம், மேற்கில் உள்ள ‘இவானொ-பிரான்கிவ்ஸ்க்’ வட்டாரம் ஆகியவற்றில் உள்ள எரிசக்தி ஆலைகளைப் பாதித்திருப்பதாக உக்ரேனின் தேசிய எரிசக்தி நிறுவனம் கூறியது.
உக்ரேனிய ஆகாயத் தற்காப்புப் படை, 53 ரஷ்ய ஏவுகணைகளில் 35ஐயும், 47 ரஷ்ய ஆளில்லா விமானங்களில் 46ஐயும் சுட்டு வீழ்த்தியதாக ஆகாயப் படை தளபதி தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து, உக்ரேனிய எரிசக்தி உள்ளமைப்பு மீதான தாக்குதல்களை ரஷ்யா அதிகரித்து வந்துள்ளது.
அதனால் ஏற்பட்ட மின் தடைகளால் மின்சார இறக்குமதிகள் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளன.
இதற்கிடையே, ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள ‘டொனெட்ஸ்க்’ நகரில் உக்ரேன் ராணுவம் நடத்திய தாக்குதலில், பொதுமக்களில் ஐந்து பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
அந்த வட்டாரத்தின் ரஷ்யத் தலைவர் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.
அந்தத் தகவலை ராய்ட்டர்ஸ் நிறுவனத்தால் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. உக்ரேனிடமிருந்தும் உடனடிக் கருத்துகள் வரவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ரஷ்ய நகரான ‘பெல்கொரொட்’இல் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்று, உக்ரேனின் ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என்று அவர்கள் கூறினர்.
ரஷ்ய ஆகாயப் படைகள் ‘பெல்கொரொட்’ பகுதியில் ஏழு ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு கூறியது.

