கியவ்: உக்ரேன்மீது ரஷ்யா சனிக்கிழமை (மே 23) இரவும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையும் ஆளில்லா வானூர்திகளையும் எறிகணைகளையும் கொண்டு பெருந்தாக்குதலை நடத்தியது.
தலைநகர் கியவ்விலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டனர்; ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரஷ்யாவின் ஸ்டாரோபில்ஸ்க் பகுதியிலுள்ள மாணவர் விடுதிமீது உக்ரேன் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு உறுதியாக பதிலடி தருவோம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சூளுரைத்திருந்தார்.
சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து 90 எறிகணைகளையும் 60 ஆளில்லா வானூர்திகளையும் கண்டறிந்ததாக உக்ரேனிய விமானப் படை தெரிவித்தது.
ஒலியைவிட பத்து மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்லக்கூடிய ‘ஒரேஷ்னிக்’ எறிகணையை ரஷ்யா பயன்படுத்தக்கூடும் என்று உளவுத்தகவல் கிடைத்துள்ளதாக உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
அந்த எறிகணையை இடைமறிப்பது மிகக் கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கியவ்வில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரேனியக் காவல்துறை தெரிவித்தது, அத்தாக்குதல்களில் குடியிருப்புக் கட்டடங்கள், பள்ளிகள், கடைத்தொகுதிகள், அவசர சேவை நிலையங்கள், காவல்துறைக் கட்டடங்கள் ஆகியவை சேதமடைந்தன.
நீர் விநியோகக் கட்டமைப்பு ஒன்றும் தாக்கப்பட்டதாக அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, ரஷ்யா மேலும் தாக்கும் சாத்தியமுள்ளதாக கியவ் ராணுவ நிர்வாகத் தலைவர் தைமுர் கச்சென்கோ கூறியுள்ளார்.

