தென்கொரியாவின் யூன் டிசம்பர் 21க்குள் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும்

1 mins read
169c8bbb-2e6e-4aa0-b9b9-5468ab1338b8
திரு யூன் சுக் இயோல், அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரிய நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தை எதிர்நோக்கிய திரு யூன் சுக் இயோல், ராணுவ ஆட்சிச் சட்டத்தை அறிவித்ததற்கு வரும் சனிக்கிழமைக்குள் விசாரணைக்கு முன்னில்லையாக வேண்டும் என வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) கூறினர்.

இல்லாவிடில் திரு யூன் கைது செய்யப்பட வேண்டியிருக்கும் என வழக்கறிஞர்கள் கூறியதை யோன்ஹாப் செய்தி நிறுவனம் மேற்கோள்காட்டியது.

கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 14) நாடாளுமன்றத்தில் திரு யூனுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தென்கொரிய வழக்கறிஞர்களும் காவல்துறை, தற்காப்பு அமைச்சு, ஊழல் தடுப்பு விசாரணையாளர்கள் அடங்கிய குழுவும் திரு யூன் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரு யூனும் அவரது வட்டத்தில் உள்ள சிலரும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டணையை அல்லது மரண தண்டணையைக் கூட எதிர்நோக்கலாம். திரு யூன் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கைப்பேசிப் பதிவுகளைப் பெற, அவரின் பாதுகாப்புச் சேவையிடம் அந்தக் கூட்டு விசாரணைக் குழு சோதனையைத் தொடங்கியுள்ளது.

இதற்கு முன்னதாக, புதன்கிழமை (டிசம்பர் 18) விசாரணைக்கு முன்னிலையாகும்படி திரு யூனிடம் அந்தக் குழு கேட்டுக்கொண்டது. ஆனால், அவரது அலுவலகம் அதை மறுத்துவிட்டதாக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்