சோல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் பாதுகாப்புக் காரணங்களால் அரசியல் குற்றச்சாட்டின் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) நடைபெறவிருக்கும் முதல் வழக்கு விசாரணையில் கலந்துகொள்ள மாட்டார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
திரு யூன் அனைத்து விசாரணைகளையும் புறக்கணித்துள்ளார். சென்ற வாரம், திரு யூனைக் கைது செய்ய முயன்ற புலனாய்வுத் துறை அதிகாரிகள், அதிபர் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதனால், அதிகாரிகள் கைது நடவடிக்கையைக் கைவிட்டனர்.
திரு யூன் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதை அடுத்து, பல்லாண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான அரசியல் நெருக்கடி தற்போது தென்கொரியாவில் நிலவுகிறது.
“பாதுகாப்புச் சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. அதனால், ஜனவரி 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் வழக்கு விசாரணையில் அதிபர் கலந்துகொள்ள மாட்டார்,” என்று வழக்கறிஞர் யூன் காப் கியூன், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்தார்.
“பாதுகாப்புப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதும் அதிபர் எந்நேரத்திலும் முன்னிலையாவதற்குத் தயாராக இருக்கிறார்,” என்றார் அவர்.
அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் ஜனவரி 14ஆம் தேதிக்கும் பிப்ரவரி 4ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வழக்கு விசாரணைகளுக்கு ஐந்து தேதிகளை நிர்ணயித்துள்ளது. திரு யூன் வழக்கு விசாரணைகளில் கலந்துகொள்ளாவிட்டாலும், அவர் இல்லாமலேயே அவை தொடரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து திரு யூனை விசாரிக்க முயற்சி செய்யும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் புதிய கைதாணையைப் பெற்றுள்ளனர்.
மேலும் ஒரு கைது நடவடிக்கையை மேற்கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர். அதிகாரிகள் அவரைக் கைது செய்தால், பதவியில் இருக்கும்போதே கைதான முதல் தென்கொரிய அதிபராக திரு யூன் இருப்பார்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டியதாக திரு யூன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமாகக் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அவருக்கு மரண தண்டனைகூட விதிக்கப்படலாம்.