சாபா தேர்தல் எதிரொலி; சிறிய நிறுவனங்களுக்கான செலவுகளைக் குறைக்கும் அன்வார் இப்ராகிம்

2 mins read
45fe0eca-4b67-415a-bb01-f9b6710edfc6
சாபா மாநிலத் தேர்தலில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி பெருந்தோல்வியைச் சந்தித்தது. - படம்: புளூம்பெர்க்

கோலாலம்பூர்: அண்மையில் நடைபெற்ற சாபா மாநிலத் தேர்தலில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி பின்னடைவைச் சந்தித்தது.

இதையடுத்து, சிறிய நிறுவனங்களுக்கான செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை அவர் அறிவித்துள்ளார்.

உள்நாட்டு வருவாய் வாரியத்தின் மின்விலைப்பட்டியல் முயற்சிகளை நிறுவனங்கள் எடுக்க வேண்டும். அம்முயற்சியில் இருந்து விலக்கு அளிக்கும் ஆண்டு வருவாய் வரம்பை 500,000 ரிங்கிட்டிலிருந்து ஒரு மில்லியன் ரிங்கிட்டாக (S$314,222) திரு அன்வார் உயர்த்தியுள்ளதாக பெர்னாமா ஊடகம் தெரிவித்தது.

சிறு வணிகங்களுக்கான வரிகளைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக அரசாங்க நிதி இரண்டு பில்லியன் ரிங்கிட்டிலிருந்து நான்கு பில்லியன் ரிங்கிட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்தது.

சாபாவில் பிரதமர் அன்வார் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கடந்த வாரம் நடைபெற்ற சாபா தேர்தலில் பிரதமரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஒரே ஓர் இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

திரு அன்வாரின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநிலக் கட்சியான ஜனநாயகச் செயல் கட்சி(டிஏபி), சிறிய நிறுவனங்கள் செயல்படுவதற்கான செலவுகள் அதிகமாக இருப்பதால் ஆதரவு குறைந்துவிட்டது என்று எச்சரித்திருந்தது.

சாபாவில் போட்டியிட்ட எட்டு இடங்களிலும் டிஏபி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து மாநில அரசாங்கத்திலும் சேர மறுத்துவிட்டது. ஆனால், அன்வாரின் ஆதரவாளரான முகம்மது நூர், சாபாவில் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார்.

டிஏபி கட்சி ஆலோசகரும் முன்னாள் நிதியமைச்சருமான லிம் குவான் இங், சிறிய நிறுவனங்களுக்கான செலவுகள் பற்றி கடுமையாக விமர்சித்து வந்தார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான அஸ்மின் அலி, தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததற்கு வர்த்தகங்களின் ஆதரவை இழந்ததே காரணம் என்று கூறியிருந்தார். டிஏபியின் ஆதரவுக்கு சீன வர்த்தகச் சமூகம் முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது.

திரு அன்வாரின் தற்போதைய நாடாளுமன்றம் 2027ஆம் ஆண்டில் நடக்கவுள்ள தேர்தலுக்காகக் கலைக்கப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கு முன்பு மலாக்கா, ஜோகூர், சரவாக் ஆகிய மூன்று மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அத்தேர்தல்கள் பிரதமருக்குச் சோதனையாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்