ஸாஹிட்: மலேசியாவெங்கும் ‘ஆட்டிசம்’ பாலர் பள்ளிகள் திறக்கப்படும்

1 mins read
b6ba723b-21b2-479a-ba90-f6163e38ffc0
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக மலேசியாவின் முதல் பாலர் பள்ளி 2025ஆம் ஆண்டு மலாக்காவில் திறக்கப்படும் என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். - படம்: பெரித்தா ஹரியான்

புத்ராஜெயா: ஆட்டிசம் எனப்படும் தொடர்புத்திறனால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாலர் பள்ளிகள் மலேசியாவெங்கும் திறக்கப்படும் என்று அந்நாட்டுத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக மலேசியாவின் முதல் பாலர் பள்ளி 2025ஆம் ஆண்டு மலாக்காவில் திறக்கப்படும்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட, வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இப்பாலர் பள்ளி முன்னுரிமை வழங்கும் என்று கிராமப்புற, வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சருமான திரு ஸாஹிட் தெரிவித்தார்.

அதன் பிறகு மலேசியாவெங்கும் இதுபோன்ற பாலர் பள்ளிகள் கட்டப்படும் என்றார் அவர்.

இதற்குத் தேவையான நிதியைத் திரட்ட கிராமப்புற, வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக திரு ஸாஹிட் கூறினார்.

“சிறப்புக் கல்வி கற்பித்தலுக்கான திறன்களைக் கொண்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இப்பயிற்சிகளைத் தொடர வேண்டும். இந்த ஆசிரியர்களுக்கான சம்பளம், படித்தொகை ஆகியவை உயர்த்தப்பட்டால் அவர்கள் தற்போதைவிட மேலும் கடுமையாக உழைப்பர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று வியாழக்கிழமை (ஜனவரி 9) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட திரு ஸாஹிட் தெரிவித்தார்.

பாலர்க் கல்விக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுப்பதைத் துணைப் பிரதமர் ஸாஹிட் வலியுறுத்தினார்.

பாலர் கல்வி மின்னிலக்கத் திட்டத்துக்கு 20 மில்லியன் ரிங்கிட் (S$6 மில்லியன்) ஒதுக்குவதாக அவர் அறிவித்தார்.

இதன்மூலம் 11,000 பாலர் பள்ளிகளுடன் ஏறத்தாழ 200,000 மாணவர்கள் பலனடைவர் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்