ஜகார்த்தா: ஜாவா கடலில் கடந்த மாதம் நேர்ந்த கப்பல் விபத்து தொடர்பில் அதன் மாலுமி கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்தோனீசியக் காவல்துறை வியாழக்கிழமை (அக்டோபர் 1) தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த 78 பேர் கடலில் மூழ்கி மாண்டனர்.
அதன் தொடர்பில் மாலுமிமீது குற்றஞ்சாட்டப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
கடந்த மாதம் 13ஆம் தேதி கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபாயாவிலிருந்து தென் கலிமந்தானில் உள்ள பஞ்சார்மசின்னுக்குச் சென்றுகொண்டிருந்த ‘த வர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற கப்பலில் 243 பேர் இருந்தனர்.
அந்தக் கப்பல் மோசமான வானிலை காரணமாகக் கடலில் மூழ்கியது. கப்பலிலிருந்து 108 பேர் தப்பித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். வேகமாகப் பாயும் நீரோட்டத்தையும் மீறி காணாமற்போனவர்களை அதிகாரிகள் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கப்பலின் மாலுமி கைதுசெய்யப்பட்டு குற்றவாளி எனச் சந்தேகிக்கப்படுவதாகத் தேசிய காவல்துறை பேச்சாளர் ட்ருனொயுடோ விஸ்னு அன்டிகோ சொன்னார். இந்தோனீசியக் கப்பல் சட்டத்தை மீறி பயணத்துக்கு ஏற்புடையதல்லாத கப்பலை மாலுமி செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்தகைய செயலால் மரணங்களும் சேதங்களும் ஏற்பட்டால் 10 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
கப்பல் விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை தற்போது 78.
57 பேரைக் காணவில்லை. தேடல் பணிகள் தொடர்கின்றன.
