புத்ராஜெயா: மலேசியாவின் வரி முறையை மேலும் முற்போக்கானதாக மாற்றுவதற்கான வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதில் தற்போது அமலிலுள்ள விற்பனை, சேவை வரியில் (எஸ்எஸ்டி) பொருள், சேவை வரியின் (ஜிஎஸ்டி) சில கூறுகளை உள்ளடக்க முடியுமா என்பதும் அடங்கும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வரி முறையின் அடிப்படையாக எஸ்எஸ்டி தொடரும் என்றும் ஆனால் ஜிஎஸ்டியின் சில அம்சங்கள் அதனை மேம்படுத்துமானால் பரிசீலிக்கப்படலாம் என்றும் திரு அன்வார் கூறினார்.
“வரி முறையை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய நாங்கள் தயாராக இருக்கிறோம்.”
“ஆனால், நாம் ஜிஎஸ்டி பற்றி மட்டும் பேசினால், நான் பலமுறை கூறியதுபோல் இது மக்களுக்கு வரி விதிப்பதாக அமையும் என்பதே எனது கவலை,” என்று அவர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) புத்ரா ஜெயாவில் உள்ள நிதி அமைச்சில் நடைபெற்ற 2027 பட்ஜெட் கலந்துரையாடல் அமர்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முற்போக்கான வரி முறையை உருவாக்குவதற்காக ஜிஎஸ்டி, எஸ்எஸ்டி ஆகியவற்றின் கூறுகளை ஒருங்கிணைப்பது குறித்த ஆலோசனைகள் பற்றி நிதி அமைச்சருமான அன்வாரிடம் கேட்கப்பட்டது.
தற்போது வரி செலுத்தாதவர்கள் ஜிஎஸ்டிக்குப் பங்களிக்க வேண்டியிருக்கும் என்றும் தற்போதைய வாழ்க்கைச் செலவு அழுத்தங்களுக்கு மத்தியில் இதை நியாயப்படுத்துவது கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இது அதிக செயல்திறன்மிக்கது என்று அவர்கள் கூறினாலும், மக்கள் மீது வரி விதிப்பது என்பது இதுவரை வரி செலுத்தாதவர்களும் வரி செலுத்தவேண்டும் என்பதாகும்.
“தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் மக்கள் மீதான சுமையுடன், இதற்கு நாம் எவ்வாறு பதிலளிப்பது?” என்று அவர் கேட்டார்.
இருப்பினும், அனைத்து மலேசியர்களையும் பாதிக்கும் ஒரு பரந்த அடிப்படையிலான வரியைத் தவிர்ப்பதில் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்று அன்வார் கூறினார்.
சில மாற்றங்கள் பரிசீலிக்கப்படலாம் என்றாலும், நாட்டின் வரிவிதிப்பு முறைக்கு எஸ்எஸ்டியே அடிப்படையாகத் தொடரும் என்று பிரதமர் அன்வர் மீண்டும் வலியுறுத்தினார்.


