தேர்தலால் விற்பனை சூடுபிடிக்கும்; ஜோகூர் வர்த்தகர்கள் நம்பிக்கை

தேர்தலால் விற்பனை சூடுபிடிக்கும்; ஜோகூர் வர்த்தகர்கள் நம்பிக்கை

1 mins read
681265de-4313-4496-b5f5-1a860031c1da
ஜோகூர் பாருவில் இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து வர்த்தகம் சற்று மந்தமடைந்ததாகக் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். - படம்: பெரித்தா ஹரியான்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு விற்பனை சூடுபிடிக்கும் என்று உள்ளூர் வர்த்தக உரிமையாளர்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து வர்த்தகம் சற்று மந்தமடைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஜோகூர் மாநிலத் தேர்தல் குறித்து இம்மாதம் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதைக் காணமுடிவதாக வர்த்தகர்கள் கூறினர். வாக்களிப்பு நாள் நெருங்க நெருங்கக் கூட்டம் இன்னும் பெருகும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜூலை 11ஆம் தேதி ஜோகூர் மாநிலத் தேர்தல் இடம்பெறும். ஜூலை 7ஆம் தேதி, மக்கள் முன்கூட்டியே வாக்களிக்க முடியும்.

முந்தைய தேர்தல்களில் பார்த்ததைப் போல இந்தத் தேர்தலிலும் பெருங்கூட்டத்தைத் தமது உணவுக் கடை ஈர்க்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார் கூலாயில் இந்திய உணவுவகைகளை விற்பனை செய்யும் 42 வயது ஆர்.ஜானகி.

இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களில் வாக்களிக்க வந்த பலர் தமது கடைக்குக் காலை உணவு உண்ணவந்ததை அவர் பகிர்ந்துகொண்டார்.

பல்வேறு ஹோட்டல் அறைகளுக்கான முன்பதிவுகளும் அதிகரித்துள்ளதாக ஜோகூர் ஹோட்டல்களுக்கான மலேசியச் சங்கத் தலைவர் ஐவன் டியோ தெரிவித்தார்.

“தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடங்கி முன்பதிவுகள் அதிகரித்துவருகின்றன,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்விற்பனைஜோகூர்