தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சால்மன் மீன்களுக்குத் தட்டுப்பாடு; கரடிக் குட்டிகள் உயிரிழப்பு

1 mins read
30fa1685-ec51-420e-a3f1-8a40fb9f89cc
இவ்வாண்டு பிறந்த கரடிக் குட்டிகளில் 70 முதல் 80 விழுக்காடு வரை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: இபிஏ

தோக்கியோ: பொதுவாக ஆகஸ்ட் மாத நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் மாத தொடக்கம் வரை, ஹொக்கைடோவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தில் உள்ள கடலோரத்தில் நீந்திக் களிக்கும் இளஞ்சிவப்பு சால்மன் மீன்களை உண்பதற்காகப் பழுப்புநிறக் கரடிகள் காத்திருக்கும்.

ஆனால், அவற்றால் இவ்வாண்டு ஆறுகளில் மீன்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கரையோரம் நின்று மீன்களைச் சுவைப்பதற்கு பதிலாக அவை உணவைத் தேடி கடலில் நீந்தி வருகின்றன என்றும் ஆசாஹி ஷிம்பன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஆறுகளில் மீன்வரத்து கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் கரடிகள் உணவின்றி உடல் மெலிந்து காணப்படுகின்றன. அவற்றிற்கு இது மிகவும் கடினமான காலம்,” எனப் படகோட்டி ஒருவர், அந்நாளிதழிடம் தெரிவித்தார்.

“இவ்வாண்டு பிறந்த கரடிக் குட்டிகளில் 70 முதல் 80 விழுக்காடுவரை இறந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய நிலை,” என ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்ததாக அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கரடிஉணவுஉயிரிழப்புஜப்பான்