டெக்சஸ்: அமெரிக்காவிலுள்ள தமிழ்ச் சமூகம் அங்கு சமயபுரம் மாரியம்மனுக்குக் கோவில் எழுப்பி வருகிறது.
டெக்சஸ் மாநிலத்தில் அமையும் அக்கோவில் அமெரிக்காவில் சமயபுரம் மாரியம்மனுக்கு எழுப்பப்படும் முதல் கோவில் என்று கோவில் நிர்வாகக் குழு தெரிவித்தது.
தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலை மாதிரியாகக் கொண்டு அக்கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவரும் தற்போது டெக்சசில் வசித்து வருபவர்களுமான தாரகராம் பாஷ்யம் - சரசுவதி இணையரின் முயற்சியால் அக்கோவில் கட்டப்படுவதாகக் கூறப்பட்டது.
தவகோனி ஏரி அருகிலுள்ள பத்து ஏக்கர் நிலப்பகுதியில் அந்தத் திருத்தலம் கட்டப்பட்டு வருகிறது.
கட்டடக்கலை வடிவமைப்பு மட்டுமின்றி, தமிழ்நாட்டுச் சமயபுரம் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் டெக்சஸ் கோவிலிலும் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கோவிலுக்கான திருச்சிலைகள் அனைத்தையும் சென்னை அருகே மாமல்லபுரத்தில் திரு செல்வநாதன் எனும் சிற்பி வடித்து வருகிறார்.
அம்மன் கோவிலுக்கான சிலைகள் தமிழ்நாட்டில் வடிக்கப்பட்டு, வெளிநாட்டில் நிறுவப்படுவது இதுவே முதன்முறை என்று கோவில் நிர்வாகக் குழு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மாரியம்மன், கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், ஐயனார், வாழ்முனி, சொரிமுத்து அய்யனார், பதினெட்டாம்படி கருப்பு ஆகிய தெய்வங்களின் சிலைகள் வடிக்கப்படுகின்றன.
தமிழ் மரபுப்படி, மாரியம்மனுக்கு உகந்த மாதத்தில் கேழ்வரகுக் கூழ் படைத்தும் வேப்பிலையைப் பயன்படுத்தியும் அம்மனை வழிபடுவது வழக்கம். அத்தகைய மரபுகளும் சடங்குகளும் டெக்சஸ் கோவிலிலும் கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தெய்வங்களின் சிலைகளை, குறிப்பாக மரபார்ந்த ஆயுதங்களை ஏந்திய தெய்வங்களின் சிலைகளை அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லவும் அவற்றை நிறுவவும் மிகுந்த சிரமப்பட்டு அனுமதி பெற்றதாக ‘ஏஎன்ஐ’ செய்தி தெரிவிக்கிறது.

