சோல்: சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் லீ ஜே யோங் நிரபராதி என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென்கொரியாவின் கீழ்நீதிமன்றங்களில் இரண்டு அவருக்கு அளித்த தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் வியாழக்கிழமை (ஜூலை 17) வழங்கியது.
மொத்தம் எட்டு பில்லியன் டாலர் (10.3 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான ஏமாற்றுச் செயல்கள், தவறான நடவடிக்கைகளின் மூலம் பங்கு விலையை மாறச் செய்தது ஆகியவற்றின் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் திரு லீ மீது சுமத்தப்பட்டிருந்தன. 2015ஆம் ஆண்டில் மற்ற நிறுவனங்களுடன் வர்த்தக ரீதியாக இணைவதன் தொடர்பில் அச்செயல்களில் அவர் ஈடுபட்டதாக நம்பப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, திரு லீயை இந்த வழக்கிலிருந்து நிரந்தரமாக விடுவித்துள்ளது.
உலகளவில் நவீன செயற்கை நுண்ணறிவுத் தகடுகளை உருவாக்குவதற்கான போட்டி நிலவுகிறது. அப்போட்டியில் பின்தங்கியுள்ள சாம்சுங் மீண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அந்த முயற்சிகளை மேற்கொள்ளத் திரு லீக்கு இருந்த இடையூறுகளை அகற்றும் என்று கூறப்படுகிறது.
சாம்சுங் சி&டி, சீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றுடன் இணைவது தொடர்பில் 2015ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. திரு லீக்கு சாம்சுங் மீதான தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த அந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.