சோல்: சாம்சங் வம்சத்தின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் இரண்டு மடங்குக்குமேல் வளர்ந்துள்ளதாகப் புளூம்பெர்க் செல்வந்தர்கள் குறியீடு தெரிவித்துள்ளது. சாம்சங் எலக்ட்ரோனிக்ஸ் குழுமத்தைத் தோற்றுவித்த லீ கன்-ஹீ குடும்பத்தின் சொத்து மதிப்பு இப்போது கிட்டத்தட்ட $58 பில்லியன் வெள்ளி.
சாம்சங் குழுமத்தை உருவாக்கிய லீ, 2020ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதையடுத்து பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கான வரியை அவரது குடும்பம் செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவால் வளர்ச்சியடைந்த பகுதி மின்கடத்திகளின் மதிப்பால் சாம்சங் குடும்பத்தின் சொத்துகள் பன்மடங்கு வளர்ச்சி காணத் தொடங்கின.
ஓராண்டுக்குமுன் சாம்சங் குடும்பத்தின் சொத்து மதிப்பு $20.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இப்போது அது, $45.5 பில்லியன் அமெரிக்க டாலர் (S$58 பில்லியன் வெள்ளி) பெருகியுள்ளதாகப் புளூம்பெர்க் செல்வந்தர் குறியீடு குறிப்பிட்டது.
ஆசியாவின் பணக்காரக் குடும்பங்களில் சாம்சங் குடும்பம் இதற்குமுன் 10வது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு அது மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.
இதற்கிடையே, சாம்சங் குடும்பம், அதற்கு விதிக்கப்பட்ட 12 டிரில்லியன் வான் ($10.4 பில்லியன் வெள்ளி) சொத்து வரியையும் இம்மாதத்துக்குள் கட்டி முடிக்கவிருக்கிறது. தவணை முறையில் ஐந்து ஆண்டுக்குச் சாம்சங் குடும்பம் சொத்து வரியைச் செலுத்தியது.


