சாம்சுங் லாபம் 18 மடங்கு உயர்வு

சாம்சுங் லாபம் 18 மடங்கு உயர்வு

படம்: ராய்ட்டர்ஸ்

06 Jul 2026 - 2:48 pm

1 mins read

சோல்: இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டைவிட 18 மடங்கு கூடுதலாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் மிகையான வளர்ச்சியால், உலகளவில் கணினிச் சில்லுகளுக்கான தேவை பலமடங்கு அதிகரித்துள்ளதே அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) தனது நடைமுறை லாபம் குறித்த அறிக்கையை வெளியிடவுள்ள நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அதன் லாபம் 86 டிரில்லியன் வொன்னாக (S$72.6 பில்லியன்) உயர்ந்திருக்கலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சாம்சுங்கின் லாபம் 4.7 டிரில்லியன் வொன்னாகப் பதிவானது. அந்நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாகச் சாதனை லாபத்தைப் பதிவுசெய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக நிறுவனங்களின் கணினிச் சில்லு விநியோகத்தைவிட ஏஐ உள்கட்டமைப்புக்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருவதால் லாபம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. நினைவுச்சில்லுப் பற்றாக்குறை வரும் 2027ஆம் ஆண்டுவரை நீடிக்கும் என அஞ்சப்படுகிறது.

என்விடியா, கூகல், ஆப்பிள் போன்ற முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய நினைவுச்சில்லு வழங்குநராக சாம்சுங் திகழ்ந்து வருகிறது.

கணினிச் சில்லுப் பற்றாக்குறை காரணமாக சாம்சங், எஸ்கே ஹைனிக்ஸ், மைக்ரான் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் பெரிதும் உயர்ந்துள்ளன. இதனையடுத்து, அவற்றின் சந்தை மதிப்பு $1 டிரில்லியனையும் தாண்டிவிட்டது.

குறிப்புச் சொற்கள்