சோல்: ‘சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ்’ நிறுவனம் ஆர்ப்பாட்டங்களுக்குப் பணிந்து, தனது ஊழியர்கள் சிலருக்கு US$400,000க்கும் (S$516,400) அதிகமான ஊக்கத்தொகை வழங்க ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, தென்கொரியா முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
‘ஹியூண்டாய் மோட்டார்’ நிறுவனத்தின் ஊழியர்கள் ஜூலை 13ஆம் தேதி, ஒருங்கிணைந்த லாபத்தில் 30 விழுக்காடுவரை ஊக்கத்தொகையாக ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி, மூன்று நாள்களுக்குப் பாதிநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ‘எச்டி ஹியூண்டாய்’ கனரக ஆலைகள், தொலைத்தொடர்பு நிறுவனமான ‘எல்ஜியூபிளஸ்’ ஆகியவற்றின் தொழிற்சங்கங்கள், செயல்பாட்டு லாபத்தில் குறைந்தது 30 விழுக்காட்டுக்கு இணையான தொகையை ஊக்கத்தொகையாக வழங்கக் கோரிவருகின்றன.
அதே வேளையில், ‘ஹன்வா ஏரோஸ்பேஸ்’, ‘எச்டி ஹியூண்டாய் எலெக்ட்ரிக்’ ஆகிய நிறுவனங்களின் ஊழியர்கள் ஊக்கத்தொகை உச்சவரம்பு முழுமையாக நீக்கப்படவேண்டும் எனக் கோருகின்றனர்.
இந்நிலையில், ஊழியர்களின் உரிமைகளை விரிவுபடுத்த அண்மையில் செய்யப்பட்ட சட்டத் திருத்தம், தொழிற்சங்கங்களுக்கு அளவுக்கு அதிகமான செல்வாக்கை வழங்கியிருப்பதாகவும் வேலைநிறுத்த மிரட்டல்களை விடுக்க ஊழியர்களுக்குத் துணிச்சலை அளித்திருப்பதாகவும் தொழில்நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

