சாம்சுங் காலாண்டு லாபம் $95.7 பில்லியனை எட்டும் எனக் கணிப்பு

செயற்கை நுண்ணறிவு சில்லுகளுக்கான தேவை அதிகரிப்பு

சாம்சுங் காலாண்டு லாபம் $95.7 பில்லியனை எட்டும் எனக் கணிப்பு

படம்: ராய்டடர்ஸ்

08 Oct 2026 - 4:10 pm

1 mins read

சோல்: செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்திற்கான கணினிச் சில்லுகளின் தேவை பெருமளவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, உலகத் தொழில்நுட்ப வரலாற்றிலேயே முதல்முறையாக சாம்சுங் எலக்ட்ரானிக்சின் காலாண்டு லாபம் 100 டிரில்லியன் கொரிய வான் (S$95.7 பில்லியன்) ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கணினிச் சில்லு தயாரிப்பு நிறுவனமான சாம்சுங், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் அதன் செயல்பாட்டு லாபம் ஒன்பது மடங்கு வரை அதிகரிக்கும் என்று வியாழக்கிழமை (அக்டோபர் 8 ) தெரிவித்துள்ளது.

சில்லுகளுக்கான தேவை அதிகரித்து, உலகளவில் நிலவும் பற்றாக்குறை காரணமாக சில்லுகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் உற்பத்தி அளவைவிட செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு முதலீடுகள் வேகமாக அதிகரித்து வருவதால், சில்லு பற்றாக்குறை 2028 வரை தொடரக்கூடும் என்று சாம்சங், மைக்ரான் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிட, மூன்றாம் காலாண்டு வருவாய் 127 விழுக்காடு உயர்ந்து 195 டிரில்லியன் வான் ஆக இருக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

எனினும், அதிகரிக்கும் உதிரிபாகச் செலவுகள், சீன நிறுவனங்களின் போட்டி, அமெரிக்காவின் சாத்தியமான வரிகள் போன்றவை நீண்டகால வருவாய் வளர்ச்சியில் சவால்களை ஏற்படுத்தக்கூடும். மேலும் சில்லுகளின் விலை உயர்வது, சாம்சுங்கின் கைப்பேசி, பிற மின்சாதனப் பிரிவுகளின் உற்பத்திச் செலவை அதிகரித்து லாபத்தைக் குறைக்கும் ஆபத்தும் உள்ளது.

தொழில்துறை சார்ந்த விரிவான நிதிநிலை அறிக்கையை சாம்சுங் நிறுவனம் அக்டோபர் 29ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடும்.

குறிப்புச் சொற்கள்
உலக நீதிமன்றம்தென்கொரியாசாம்சுங்லாபம்செயற்கை நுண்ணறிவுகணினிச் சில்லுஉற்பத்தி